கனமழை காரணமாக, சென்னை விமான நிலையம் டிச., 6ம் தேதி வரை மூடப்படுகிறது. சென்னை, காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில், நவ., 30 அதிகாலை முதல், கனமழை பெய்து வருகிறது.
இதனால், அடையாறு ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை, விமானம் நிறுத்தும் இடம் ஆகியவற்றில் மழைநீர், குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து, டிச., 1 இரவு, 9:00 மணிக்கு, விமான நிலையம் மூடப்பட்டு, 'நள்ளிரவு, 11:00 மணி முதல், விமானங்கள் இயக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. எனினும், நேற்று காலை, 6:00 மணி வரை விமானங்கள் இயக்கப்படவில்லை.
இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளிவரும் தண்ணீர் மற்றும் தொடர் மழையால், விமான நிலையத்தில் தேங்கியுள்ள தண்ணீர் வெளியேறவில்லை.இதனால், விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படவில்லை. தொடர்ந்து மழை பெய்து வருவதால் டிச., 6ம் தேதிவரை விமான நிலையத்தை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இதுவரை, அதிகபட்சமாக, ஆறு மணி நேரம், விமான சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. தற்போது முதல் முறையாக டிச., 6ம் தேதிவரை விமான நிலையம் மூடப்படுகிறது' என்றார்.
கோட்டை விட்ட அதிகாரிகள் :
சென்னை விமான நிலையத்தில், பயணிகள் வசதி குறித்து ஆய்வு செய்ய தனி குழு உள்ளது. இதில், விமான நிலைய இயக்குனர், மாவட்ட கலெக்டர், எம்.பி., உள்ளிட்டோர் உள்ளனர். இந்த குழுவின் கூட்டம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடி, பாதுகாப்பு, பயணிகள் வசதி குறித்து ஆய்வு செய்யும். ஆனால், இந்த குழு கூட்டம் முறையாக நடக்கவில்லை. 'சென்னையில் கனமழை பெய்யும்' என, வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்தும் விமான நிலைய அதிகாரிகள், முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த அலட்சியத்தால் தான், தற்போது விமான நிலையத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment