Pages

Monday, December 28, 2015

வீட்டுக் கடன்... சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்!


லட்சக்கணக்கான தொகையை மொத்தமாக புரட்டி வீடு வாங்க முடியாது என்பதாலும், திரும்பக் கட்டும் மாதத் தவணைக்கு வட்டி மற்றும் அசலில் வரிச் சலுகை கிடைக்கிறது என்பதாலும் பலர் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்கவே பலரும் விரும்புகிறார்கள்.


இந்தியாவில் 15,  ஆண்டுகள், 20 ஆண்டுகளுக்கு என வீட்டுக் கடன் வாங்கி இருந்தாலும் அதனை சராசரியாக எட்டு ஆண்டுகளில் கட்டி முடித்துவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வீட்டுக் கடனை தேர்ந்தெடுத்த காலம் வரை கட்டினால், கட்டும் வட்டி அதிகமாக இருக்கும். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்க்கலாம்.

* கடன் தொகை ரூ. 25 லட்சம்

* திரும்பக் கட்டும் காலம் 30 ஆண்டுகள் (360 மாதங்கள்)

* வட்டி: 10%

* மாதத் தவணை ரூ. 21,939

இங்கே வாங்கும் கடனோ ரூ.25 லட்சம் தான். ஆனால், அதற்கு கட்டும் வட்டியோ ஏறக்குறைய ரூ.54 லட்சம்.

இப்படி கடைசி வரைக்கும் கடனைக் கட்டுவதற்கு பதில் சில உத்திகளைப் பின்பற்றி வட்டியைக் கணிசமாக மிச்சப்படுத்தலாம். அவை பற்றி...


(1) மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை அதிகரித்துக் கட்டுதல்!

மாதத் தவணை ரூ.21,939 என்பதற்கு பதில் கூடுதலாக மாதம் ரூ.3,061 அதிகரித்து ரூ.25,000 ஆக கட்டி வந்தால், வீட்டுக் கடன் 360 மாதங்களுக்கு பதிலாக 216-வது மாதத்திலே  முடிந்துவிடும். இங்கே வட்டிக்காக செல்லும் தொகை ரூ.29 லட்சம்தான். அதாவது, மாதம் ரூ.3,061 அதிகரித்து கட்டுவதன் மூலம் வட்டியில் ரூ.25 லட்சம் மிச்சமாகும்.

(2) ஆண்டு தோறும் தவணை அதிகரித்து கட்டுதல்!

முதல் ஆண்டு மட்டும் ஆரம்பத்தில் கட்டும் வீட்டுக் கடனுக்கு உரிய தவணையை கட்டி விட்டு, அதன்பிறகு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அதிகரித்து வரும்பட்சத்தில் வட்டி கணிசமாக மிச்சமாகும். அதாவது, முதல் ஆண்டு தவிர, அடுத்து வரும் ஆண்டுகளில் தவணையை மாதம் ரூ.5,000 வீதம் அதிகரித்து கட்டி வந்தால், வீட்டுக் கடன் 360 மாதங்களுக்கு பதில் 103 மாதங்களிலேயே முடிந்துவிடும். இங்கே வட்டிக்கு செல்லும் தொகை சுமார் ரூ.15 லட்சம்தான். வட்டியில் சுமார் ரூ.38.5 லட்சம் மிச்சமாகும்.

(3) ஆண்டுதோறும் கூடுதல் தொகை கட்டுதல்!

வீட்டுக் கடன் தவணை தொகையை அப்படியே கட்டிவரும் நிலையில் இரண்டாம் ஆண்டு முதல் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை அதிகரித்து வருவது மூலமும் வீட்டுக் கடனுக்கான வட்டியில் கணிசமாக ஒரு தொகையை மிச்சப்படுத்த முடியும். உதாரணமாக ஒருவர், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கூடுதலாக அசலைக் கட்டி வருகிறார் என்றால், அவரது கடன் 159-வது மாதத்தில் முடிந்துவிடும். இங்கே வட்டிக்கு செல்லும் தொகை ரூ.19.21 லட்சம்தான். வட்டியில் சுமார் ரூ.34.77 லட்சம் மிச்சமாகும்.

உங்களுக்கு ஏற்ற வழிமுறைகளை பின்பற்றி வீட்டுக் கடனை விரைந்து அடைக்க முயலுங்கள்!

No comments:

Post a Comment