உள்ளாட்சி அமைப்புக்கு போட்டியிடுவோருக்கான கல்வி தகுதியை, ஹரியானா மாநில அரசு சட்டமாக இயற்றி உள்ளது. இதை எதிர்த்த வழக்கில், 'ஹரியானா அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும்' என, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இத்தகைய சட்டம், தமிழகத்தில் கொண்டு வரப்பட்டால், என்ன விளைவுகள் ஏற்படும் என்ற கருத்து உருவாகி உள்ளது.
வசந்தி தேவி, காந்தி கிராம கிராமிய பல்கலை முன்னாள் துணைவேந்தர்: 'உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும், பொதுப் பிரிவினர், 10ம் வகுப்பும், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர், 8ம் வகுப்பும், தாழ்த்தப்பட்ட பெண்கள், 5ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்' என, ஹரியானா மாநில அரசு கொண்டு வந்த சட்டத்தை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டில், இதுபோன்ற சட்டம், ஒரு பிரிவினரை நிர்வாகத்தில் இருந்து ஒதுக்கும் முயற்சியாகவே அமையும். எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு இல்லாத கெடுபிடி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் எதற்கு? சமூகத்தில், மக்களோடு நெருங்கிப் பழகி, அவர்களின் பிரச்னைகளை அறிந்து, அவற்றை களைய நிர்வாகம் செய்பவர்கள் தான் தேவை. கல்வி, இந்த நிர்வாகத்தை அளித்து விடாது.படித்த பலருக்கும், சமூகத்துக்கும் தொடர்பே இல்லை. வகுப்பறை கல்வி, வாழ்க்கை கல்வியை அளிக்காது என்பது நிதர்சனம். நம் நாட்டில் உள்ள, மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் படித்தவர்கள் அல்ல.கல்வி பெற்றால், ஊழல் இருக்காது என்பதும் தவறு. இன்று பெரிய பெரிய ஊழலில் சிக்கி உள்ளவர்கள் அனைவரும் படித்தவர்களே; படிக்காத பாமரர் யாரும், நாட்டை அதிர வைக்கும் ஊழலை செய்யவில்லை.
ஜெயரஞ்சன், பொருளாதார வல்லுனர்: உள்ளாட்சி அமைப்பை, ஊராட்சி தலைவர் மட்டும் நிர்வகிப்பதில்லை. உள்ளாட்சி அமைப்பு செயலர், இயக்குனர், கலெக்டர், பிற கீழ்மட்ட அதிகாரிகள் அனைவரும் சேர்ந்தே நிர்வகிக்கின்றனர். ஒரு திட்டத்தை உருவாக்கி அதை செயல்படுத்துவது படித்த அதிகாரிகளே. அவர்களுடன் இணைந்தே, மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர். கிராம சபைகள் நடத்தி, திட்டங்களை முடிவு செய்து நிறைவேற்ற வேண்டும். ஆனால், அதுபோன்ற செயல்கள் நடக்கிறதா என்பது கேள்விக்குறி. உள்ளாட்சி அமைப்பில் நிகழும் ஊழலைத் தடுக்க, கல்வி முக்கியம் என்ற வாதம் பொருத்தம் இல்லாதது. நேர்மைக்கும், கல்விக்கும் தொடர்பு இல்லை. படிக்காத பெண்கள், உள்ளாட்சி பொறுப்புக்கு வரும் போது, ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்கின்றனர். ஆண் ஆதிக்க சமூகத்தில், பெண்கள் முக்கியத்துவம் பெற கல்வி எந்த வகையிலும் உதவாது.சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே, ஆண் ஆதிக்க தலையீட்டை நிறுத்த முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment