சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால் யு.பி.எஸ்.சி. முதன்மை தேர்வுகளை ஒத்தி வைக்க கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. ஆனால், எக்காரணம் கொண்டும் தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாது என யு.பி.எஸ்.சி. மறுப்பு தெரிவித்ததால், இந்த வழக்கை வழக்கம்போல பட்டியலிட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி வினோத் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங் களில் ஏற்பட்ட பெரு மழை வெள்ள பாதிப்பின் காரணமாக பொதுமக்கள் உடைமைகளை இழந்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த எண்ணற்ற மாணவர்கள் மத்திய அரசின் யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு சென்னையில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இந்தியா முழுவதும் 15 ஆயிரம் பேர் முதன்மை தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வுகள் நாளை (டிச.18) தொடங்கி டிச.23 வரை நடக்கவுள்ளது.
சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பாதிப் பால் யு.பி.எஸ்.சி. முதன்மை தேர்வுக்கு தயாராகி வந்த பல தமிழக மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். அரசால் நடத்தப்படும் அடையாறு சிவில் சர்வீஸ் பயிற்சி மையம் மற்றும் சைதாப்பேட்டை, அண்ணாநகர் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பயிற்சி பெற்ற மாணவர்கள் தங்கு வதற்கு கூட இடமின்றி மேன்சனில் தங்கியுள்ளனர். வரும் நாட்களிலும் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனால் தமிழக மாண வர்கள் உளவியல் ரீதியாக பாதிக் கப்பட்டுள்ளனர்.
ஆனால், திட்டமிட்ட தேதியில் முதன்மை தேர்வுகளை நடத்த யு.பி.எஸ்.சி. ‘இ-அட்மிட்’ சீட்டு களை விநியோகித்து வருகிறது. எனவே யு.பி.எஸ்.சி. முதன்மை தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என அதில் கோரியிருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், பிரபா சத்திய நாராயணா ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் வலியுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக யு.பி.எஸ்.சி. நேற்று மதியத்துக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி யு.பி.எஸ்.சி. சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் எம்.டி.அருணன், முதன்மை தேர்வை ஒத்தி வைக்க எந்த வாய்ப்பும் இல்லை. தேர்வு மையம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 855 பேர் இத்தேர்வை எழுதவுள்ளனர். அதில் வெறும் 7 பேர் மட்டுமே இன்னும் நுழைவுச்சீட்டு பெறவில்லை என நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
அதையடுத்து இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், வழக்கம்போல இந்த வழக்கை பட்டியலிட உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment