அரசு செவிலியர் பள்ளிகள், கல்லூரிகளில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை விரைந்து நிரப்ப வேண்டும் என்று
கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் மொத்தம் 23 அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளும், 5 செவிலியர் கல்லூரிகளும் செயல்பட்டு உள்ளன. இவற்றில் சுமார் 2,000 மாணவிகள் பயின்று வருகின்றனர். செவிலியர் பள்ளிகளில்...: 8 பள்ளிகளில் முதல்வர்கள் பணியிடம் காலியாக உள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்த நிலையில், அனைத்து கல்லூரிகளிலும் 100 மாணவிகள் என்று சமமாகப் பிரிக்கப்பட்ட நிலையில், 150 ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக நிரப்ப வேண்டிய அவசியம் உள்ளது என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து கல்லூரி ஆசிரியர்கள் சிலர் கூறியது: ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள் மூப்பு அடிப்படையில் முதல்வர்களாகப் பணியமர்த்தப்படுகின்றனர். ஓய்வு பெற்றதும் கல்லூரிகளில் பணியிடங்கள் நிரப்பப்படாமல், இழுத்தடிக்கப்படுகிறது. இதனால் கல்லூரிக்குத் தேவையான தீர்மானங்கள், முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. பெரும்பாலான கல்லூரிகளில் நிர்வாகம் தொடர்பான பணிகளை ஆசிரியர்களும், துணை முதல்வர்களுமே மேற்கொள்கின்றனர். நிர்வாகப் பணிகளை கவனிப்பவர்களால் வகுப்புக்குச் செல்ல இயலாது. இதனால் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுகிறது என்றனர். செவிலியர் கல்லூரியில்..: 5 அரசு செவிலிய கல்லூரிகளில் ஒரு கல்லூரியில் முதல்வர் பணியிடம் காலியாக உள்ளது. அனைத்துக் கல்லூரிகளிலும் மொத்தம் வெறும் 8 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். இந்த நிலையில், மருத்துவமனையில் பயிற்றுநர்களாக உள்வர்கள் கல்லூரிகளில் கற்பிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிகளில் மொத்தம் ஐந்து துறைகள் உள்ளன. குறைந்தது ஒரு துறைக்கு இரண்டு ஆசிரியர்களாவது பணியமர்த்த வேண்டும். அப்போதுதான் மாணவிகளின் கல்வித் தரம் அதிகரிக்கும் என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இப்போது அரசுத் துறைகளில் பயின்றாலும் போட்டித் தேர்வின் மூலமே நியமனம் செய்யப்படுகின்றனர். மருத்துவமனைகளிலும் கூட தமிழ்நாடு அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகப் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். எனவே மாணவிகளின் கல்வித் தரத்தை முன்னேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், எனவே போதிய அளவில் ஆசிரியர்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுக் கின்றனர். இதுகுறித்து சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், மழை வெள்ள நிவாரணப் பணிகள் நிறைவடைந்ததும், காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றனர்.
No comments:
Post a Comment