காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் சங்கத்தினர் ஆட்சியர் இ.வல்லவனை சந்தித்து வலியுறுத்தினர்.
காரைக்கால் மாவட்ட பெற்றோர் சங்கத் தலைவர் எல்.எஸ்.பி. சோழசிங்கராயர் தலைமையில் சங்கத்தின் இணைச் செயலர் ஆர்.சி.வேல்முருகன், காரைக்கால் பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் காளிதாசன் உள்ளிட்டோர் ஆட்சியரை புதன்கிழமை சந்தித்த கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். தற்போது அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2-க்கான அரையாண்டுத் தேர்வு நடைபெறுகிறது. மாவட்டத்தில் திருநள்ளாறு, தேனூர், அம்பகரத்தூர் ஆகிய அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பொருளாதாரம், கணக்கு பாடத்துக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிகழ் கல்வியாண்டு தொடங்கியது முதல் காலியாக உள்ளன.
காரைக்கால் தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி, அன்னை தெரஸா அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பிரெஞ்ச் பாடத்துக்கும், ஹோம் சயின்ஸ் பாடத்துக்கும் ஆசிரியர்கள் இல்லை. பிளஸ் 1-ல் கோட்டுச்சேரி வ.உ.சி. பள்ளி, தலத்தெரு என்.எஸ்.சி. போஸ் பள்ளி, நெடுங்காடு ஜவாஹர்லால் நேரு மேல்நிலைப் பள்ளி, திருப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி, அம்பகரத்தூர், திருநள்ளாறு, தேனூர் அரசுப் பள்ளிகளில் பல்வேறு பாடப் பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது என ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர்.
கோரிக்கை தொடர்பாக ஆட்சியரை சந்தித்து திரும்பிய சங்க நிர்வாகிகள், "மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக புதுச்சேரி கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேசி விரைவாக நடவடிக்கை எடுப்பதாகவும், 10-ஆம் வகுப்பில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப உடனடியாக எடுக்கப்படும் எனவும்' ஆட்சியர் உறுதியளித்ததாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment