Pages

Tuesday, December 22, 2015

மாணவர்கள் போராட்டம் வாபஸ்: கோரிக்கைகளை நிறைவேற்ற பல்கலை. உறுதி


கோரிக்கைகளை நிறைவேற்ற பல்கலைக்கழக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை திங்கள்கிழமை திரும்பப் பெற்றனர்.

 சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர் பேசிக் கொண்டிருந்தபோது மாணவர் ஒருவர் குறுக்கிட்டு கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த மாணவரை பல்கலைக்கழக ஊழியர்களும், பேராசிரியர்களும் அரங்கிலிருந்து வெளியேற்றினர். அப்போது அந்த மாணவரை சிலர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

 இதைக் கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மீண்டும் ஜனவரி 4-ஆம் தேதிதான் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் விடுதியும் மூடப்பட்டது.
 இந்த நிலையில், பல்கலைக்கழக முதுநிலை மாணவர்கள் சிலர் விடுதியிலிருந்து வெளியேற மறுத்து கடந்த 17-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். விடுதி உணவகம் மூடப்பட்டதால், மாணவர்களே விடுதி வளாகத்தில் சமைத்து உணவருந்தினர்.
 அதைத் தொடர்ந்து, விடுதியில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வெள்ளிக்கிழமை இரவு துண்டிக்கப்பட்டது.
 இதைக் கண்டித்து விடுதிக்கு முன் சாலையில் சனிக்கிழமை காலை போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
 பின்னர், கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, மாணவர்கள் விடுதிக்குத் திரும்பினர்.
 இந்த நிலையில், திங்கள்கிழமை காலை பல்கலைக்கழக பதிவாளர் டேவிட் ஜவஹர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
 இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் டேவிட் ஜவஹர் கூறியது: 
 கருத்தரங்கில் குறுக்கிட்ட மாணவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து விசாரிக்கக் குழு ஒன்று அமைக்கப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
 மேலும் சில கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்தனர். கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாகக் கொடுத்தால், பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 
 அதோடு, மாணவர் சங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரினர். ஆனால், இப்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் முடிவடைய உள்ளதால், புதிய துணைவேந்தர் வந்த பிறகே அதுகுறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
 இதை மாணவர்கள் ஏற்றுக்கொண்டு, போராட்டத்தைத் திரும்பப் பெற சம்மதம் தெரிவித்தனர் என்றார்.

No comments:

Post a Comment