அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அளிக்கப்படும் மகப்பேறு விடுமுறையை, 12 வாரத்திலிருந்து, 26 வாரமாக உயர்த்த, மத்திய அரசு உத்தரவிட உள்ளது.
மகப்பேறு கால பயன் சட்டத்தின் கீழ், பெண் ஊழியர்கள், அதிகபட்சம், 12 வாரங்கள் அல்லது 84 நாட்கள், மகப்பேறு விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். இந்த விடுமுறையை, பிரசவ தேதிக்கு முந்தைய, ஆறு வாரத்திலிருந்து எடுக்கலாம். குழந்தை பிறப்புக்கு பின், பெண்ணின் பொறுப்புகள் அதிகரிப்பதால், விடுமுறை காலம் போதாது என்ற கருத்து எழுந்துள்ளது.
இந்நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, மேனகா, நிருபர்களிடம் கூறுகையில், ''குழந்தை பிறந்த பின், ஆறு மாத காலம், பால் புகட்ட வேண்டிய அவசியம் இருப்பதால், பெண்களுக்கு, 26 வார காலம், மகப்பேறு விடுமுறை அளிக்க வேண்டுமென்ற என் கோரிக்கையை, தொழிலாளர் துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது,'' எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தொழிலாளர் துறை உயரதிகாரி கூறுகையில், 'தனியார் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு, ஆறரை மாதம், மகப்பேறு விடுமுறை அளிப்பதென, தொழிலாளர் துறை முடிவு செய்துள்ளது. இருப்பினும், இந்த விடுமுறையை, எட்டு மாதங்களாக அதிகரிக்க வேண்டுமென கருதுகிறோம். இதுபற்றி, அமைச்சரவை செயலகத்துக்கு கடிதம் எழுத உள்ளோம்; விரைவில் அறிவிப்புவெளியாகும்' என்றார்
No comments:
Post a Comment