பிளஸ் 2 பொதுத் தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்க தனியார் பள்ளிகளுடன் தொடர்பில் உள்ள தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தனியார் பள்ளித் தேர்வு மையங்களில் பணி வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.
கழகத்தின் நாமக்கல் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் கணேசன் தலைமையில் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் ரா.சரவணமுத்து, மாவட்டப் பொருளர் செல்வராஜ் ஆகியோர் பேசினர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 பொதுத் தேர்வை 20 நாள்கள் ஒத்தி வைக்க வேண்டும். விடைத்தாள் திருத்த தாள் ஒன்றுக்கு ரூ.20 வழங்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணி அனைத்து மேல்நிலைத் தேர்வுகளும் முடிந்த பின்னரே தொடங்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலாவது கருத்தியல் தேர்வு முடிந்தபின்னரே செய்முறைத் தேர்வை நடத்த வேண்டும். ஜனவரி 30, 31, பிப்ரவரி 1-இல் நடைபெறும் ஜேக்டோ மறியல் போராட்டத்தில் அனைத்து முதுநிலை ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும். பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்வு முறைகேடுகளைத் தவிர்க்க தனியார் பள்ளிகளுடன் தொடர்பில் உள்ள தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தனியார் பள்ளித் தேர்வு மையங்களில் பணி வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தலைமையிடச் செயலர் பெரியண்ணன், மாவட்ட துணைத் தலைவர் பொன்னுசாமி, இணைச் செயலர் பூவலிங்கம், அமைப்புச் செயலர் தர்மராஜ், தனியார் பள்ளிச் செயலர் செல்வநாதன், பொதுக்குழு உறுப்பினர் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment