இன்று டிசம்பர் 11
பாரதியாரின் 134-வது பிறந்த தினம்
"பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு" என்று முழங்கி முப்பொழுதும் தாய் நாட்டின் மீதும், "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று தனது தாய்மொழியான தமிழின் மீதும் தீராத பற்றுக்கொண்டிருந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 134-ஆவது பிறந்த தினம் இன்று. இந்த நாளில் அவரது வாழ்வின் சில முக்கியத் தருணங்களை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
"காலா உன்னை சிறு புல்லென மதிக்கிறேன் , எந்தன் காலருகே வாடா ,சற்றே உனை மிதிக்கிறேன்" என மரணத்தையும் கம்பீரமாக எதிர்கொண்டு கவிதை பாடிய மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 134-ஆவது பிறந்த தினம் இன்று.
1882-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசுவாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும் பிறந்தார் சுப்பையா என்கிற பாரதி. இயல்பிலேயே கவி பாடும் ஆற்றல் இருந்ததால் தனது 5-ஆவது வயதில் பாரதி என்ற பட்டத்தைப் பெற்றார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த பாரதியார் தனது 14-வது வயதில் செல்லம்மா என்பவரை மணம் புரிந்து கொண்டார்.
நெல்லையில் உள்ள இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற பாரதி அதற்குப் பிறகு காசிக்குச் சென்று உயர்கல்வியைத் தொடர்ந்தார். அங்கு சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்ற பாரதி, அங்கிருந்தபோது தலைப்பாகை அணியும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டார்.
1901- ஆம் ஆண்டு மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பிய பாரதி எட்டயபுரம் மன்னரின் அவைப்புலவராகத் திகழ்ந்தார். பிறகு, 1904-ஆம் ஆண்டு சுதேசமித்திரன் பத்திரிகையில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1905-ஆம் ஆண்டு சூரத் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற அவர் அங்கு தான், விவேகானந்தரின் சீடரான நிவேதிதா தேவியைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு தான் பாரதியின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்து பெண் விடுதலை குறித்த பாடல்களை எழுத தூண்டுதலாக அமைந்தது.
1907-ஆம் ஆண்டு இந்தியா பத்திரிகையில் பணியாற்றிய பாரதி தேசப்பற்றை வளர்க்கும் பாடல்களையும், உலக நடப்பு குறித்த கட்டுரைகளையும் எழுதினார். ஆங்கிலேய அரசால் கைது செய்யப்படும் அபாயம் இருந்ததால் புதுச்சேரியில் தஞ்சம் அடைந்த அவர் அங்கு இந்தியா, விஜயா உள்ளிட்ட பத்திரிகைகளில் பணிபுரிந்தார்.
புதுச்சேரி மண்ணில் தான் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற தலைசிறந்த படைப்புகள் பாரதியாரால் படைக்கப்பட்டன. பாப்பா பாட்டு, நாட்டுப்பற்று பாடல்கள், தோத்திரப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், வசன கவிதை, ஞானரதம், ஆறில் ஒரு பங்கு என பல கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என எழுதிக் குவித்த பாரதியார் செப்டம்பர் 11-ஆம் தேதி, 1921-ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.
சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிகையாளர், சமூகத்தின் மீது அளவிலா அக்கறை காட்டிய மனிதர், சாதிப் பிளவுகளை வெறுத்தவர், பெண்ணியத்திற்கு குரல் கொடுத்த நடுநிலையாளர் என இன்னும் பல்வேறு அடையாளங்களுடன் உலகெங்கும் உள்ள தமிழர்களால் ஆராதிக்கப்படும் மகாகவி பாரதி மறைந்தாலும், அவரது எழுத்தின்வீச்சு என்று சாகாவரம் பெற்றவை.
No comments:
Post a Comment