Pages

Tuesday, December 8, 2015

வங்கியில் தனி நபர் கடன் கிடைக்குமா? உடைமை இழந்தோர் வேண்டுகோள்


வெள்ளத்தில் உடைமைகளை இழந்து, புதிய வாழ்க்கையை துவங்க உள்ளவர்களுக்கு, வங்கிகள், தனிநபர் கடனை வழங்க வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


மழை வெள்ளத்தில், உயிர் இழந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கு, மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் அளிக்கின்றன. ஆனால், வீடு மற்றும் உடைமைகளை இழந்தவர்கள், புதிதாக வாழ்க்கையை துவங்க வேண்டி உள்ளது. அவர்களின் திருப்பி செலுத்தும் தகுதிக்கு ஏற்ப, ஒரு லட்சம் முதல், ஐந்து லட்சம் ரூபாய் வரை, 5 முதல், 7 சதவீத வட்டியில், குறுகிய கால கடனை வங்கிகள் வழங்க வேண்டும்.

சென்னை, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த, தனியார் நிறுவன அதிகாரி எழில் கூறியதாவது:

முதல் தளத்தில் வசிக்கும் என் வீடு, வெள்ளத்தில் மூழ்கி விட்டது; உடைமைகள் அனைத்தையும் இழந்து விட்டோம். மாற்று ஆடைகளை கூட, புதிதாக வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். என் குடும்ப வாழ்க்கையை புதிதாக துவங்கும் நிலையில் இருக்கிறேன். எனக்கு தனிநபர் கடன் வழங்கினால் மட்டுமே, தொடர்ந்து வாழ முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடக்கும் இந்த நேரத்தில், தமிழக வெள்ளப் பாதிப்பை, மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, வங்கிகள் தனிநபர் கடன் வழங்க, அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ம.க., - எம்.பி.,க்கள் வலியுறுத்த வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கூடுதல் கடன் தொகை எஸ்.பி.ஐ., அறிவிப்பு:

எஸ்.பி.ஐ., வங்கி, நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
* மொபைல் ஏ.டி.எம்., மூலம் பணம் அளிக்கப்படும்
*பி.ஓ.எஸ்., எனப்படும், கையடக்க இயந்திரம் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்படும்
*வணிக முகவர்கள் மூலம் ஓய்வூதியம் அளிக்கப்படும்
*வீடு, கார் மற்றும் தனிநபர் கடன்களுக்கான, நவ., - டிச., தவணை தொகையை, தாமதமாக செலுத்தினால் அபராதம் இல்லை
*வீடு, கார் மற்றும் தனி நபர் கடன் பெற்றவர்களுக்கு, விண்ணப்ப கட்டணமின்றி, கூடுதல் கடன் தொகை வழங்கப்படும் 
*மாதம் ஊதியம் பெறுவோருக்கு, மூன்று மாத ஊதியம் சம்பள கடனாக அளிக்கப்படும்
*ஏ.டி.எம்., அட்டை பழுது அல்லது தொலைந்திருந்தால், இலவசமாக புதிய அட்டை வழங்கப்படும்
*கார் கடன் பெற்றவர்களுக்கு, கார் பழுது பார்க்க, கார் மதிப்பில் மதிப்பில், 10 சதவீத தொகை கடனாக அளிக்கப்படும்
*எஸ்.பி.ஐ., காப்பீட்டுதாரர்களுக்கு, காப்பீடு கோரும் தொகையில், 50 சதவீதம் இடைக்கால நிவாரணமாக அளிக்கப்படும். இதற்கு, சிறப்பு கவுன்டர்கள் துவங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment