Pages

Wednesday, December 9, 2015

உலகிலேயே வங்க தேசத்துக்கு அடுத்தபடியாக அதிகம் வெள்ளம் வரக்கூடிய நாடு இந்தியா - ஓர் அலசல்


தமிழகத்துக்கோ இந்தியாவுக்கோ வெள்ளம் புதியதொரு நிகழ்வல்ல. காலம்காலமாக வெள்ளம் வரக்கூடிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள், வெள்ளத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது, சமாளிப்பது, எதிர்கொள்வது என்று கற்றிருந்தார்கள்.


அந்த அறிவை இன்றைக்குத் தொலைத்துவிட்டதன் விளைவே, பெரும் பொருட்சேதங்களும் உயிர்ச்சேதமும்.

இரண்டாவது நாடு

உலகிலேயே வங்க தேசத்துக்கு அடுத்தபடியாக அதிகம் வெள்ளம் வரக்கூடிய நாடு இந்தியா. இந்தியாவின் நான்கு கோடி ஹெக்டேர் பரப்பு வெள்ள பாதிப்புக்கு உள்ளாகக்கூடியது. ஆண்டுதோறும் இதில் ஐந்தில் ஒரு பகுதியில் வெள்ளம் வந்துகொண்டிருக்கிறது. 1953-1995-க்கு இடைப்பட்ட 42 ஆண்டு காலத்தில் ஒவ்வோர் ஆண்டும் நாடு இழந்த பயிர்கள், வீடுகள், பொதுச் சொத்து சேதத்தின் சராசரி மதிப்பு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள். மனித உயிரிழப்போ கணக்கிட முடியாதது.

ஆங்கிலேயர்கள் காலத்தில் நாட்டின் முக்கிய நதிகளில் மணல்மேடுகள் (Enbankments) உருவாக்கி வெள்ளத் தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நாடு விடுதலை பெற்ற பிறகு மணல்மேடுகளை உருவாக்கி வெள்ளத்தைத் தடுப்பதற்கு பதிலாக அணைகளைக் கட்டி வெள்ளத்தைத் தேக்குவதில் கவனம் திரும்பியது. முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலேயே இது எதிரொலித்தது. அணைகளைக் கட்டிவிட்டால் பிறகு வெள்ள பாதிப்பே இருக்காது என்று நம்பினார்கள். அதற்குக் காரணம் நதியின் கரைகளில் ஆங்காங்கே வெள்ளநீர் வெளியேறாமல் தடுக்கும் வேலையை மட்டுமே மணல்மேடுகள் செய்யும். ஆனால் அணைகளோ உயரமான பகுதிகளிலேயே வெள்ளநீரை தேக்கி வைத்துக்கொள்ளும், அதனால் அணைக்குக் கீழிருக்கும் பகுதிகளில் வெள்ளம் வராது என்று நம்பப்பட்டது.

அணைகள் காப்பாற்றுமா?

அணைக் கட்டுமானத் திட்டங்கள் ஏதும் தொடங்குவதற்கு முன்னாலேயே 1954-ம் ஆண்டில் கடுமையான வெள்ளங்கள் வந்தன. வடஇந்தியாவில் இருக்கும் அனைத்து நதிகளிலும் வெள்ளம் வந்து உத்தரப் பிரதேசம், பிஹார், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்கள் மோசமான அழிவைச் சந்தி்த்தன. வெள்ளத்தை தடுப்பதற்கு எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படாதது, அப்போது மக்களின் கவனத்தை ஈர்த்தது. உடனே ‘வெள்ளத்தைத் தடுக்க ஒரே வழி அணைகளைக் கட்டுவதுதான்' என்று மத்திய அரசு சொன்னது. உடனடியாக மணல்மேடுகளையும் அணைகளையும் பரவலாக உருவாக்க ஆரம்பித்தது. இந்தப் பின்னணியில்தான் பக்ரா நங்கல், ஹிராகுட் போன்ற பெரிய பெரிய அணைகள் கட்டப்பட்டன. ‘அணைகளே, நவீன இந்தியாவின் கோயில்கள்' என்று நேரு சொன்னது இந்தப் பின்னணியில்தான்.

இன்றைக்கு நாடெங்கும் 4,525 பேரணைகளும் சிற்றனைகளும் இருக்கின்றன. ‘வெள்ளத்தைத் தடுப்பதற்காக’ என்ற பெயரில் பெரும் செலவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரணைகள், கால்வாய்கள், மணல்மேடுகள் (Enbankments) இப்போதும் உருவாக்கப்படுகின்றன. ஆனால், அவை வெள்ளத்தைத் தடுக்கின்றனவா?

வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் என்று நம்பப்படும் அணைகளும் நீர்த்தேக்கங்களும்கூட சில நேரம் வெள்ளத்துக்குக் காரணமாக அமையலாம். மழை பெய்யத் தொடங்கியவுடன் இவற்றில் தண்ணீர் தேக்கப்படும். பருவமழை தீவிரமடைந்து அணைகள் - நீர்த்தேக்கங்கள் கொள்ளளவை எட்ட ஆரம்பிக்கும்போது தண்ணீர் அவசரமாகத் திறந்துவிடப்படும். அந்த நிலையில் ஒரு ஆற்றிலோ, கால்வாயிலோ கொள்ளளவைவிட அதிகமாகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும், வெள்ளம் வரும். ஆனால், சென்னை போன்ற மாநகரங்களில் பெரிய அணைகள் எதுவும் இல்லை.

காணாமல் போன வெள்ளநீர் வடிகால்கள்

வெள்ளநீர் வடிகால்கள்தான் ஆற்றில் வரும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி, அதிகப்படியாக உள்ள நீரை இயற்கையாக வெளியேற்ற உதவுபவை. ஒவ்வொரு ஆற்றுப் பகுதியையும் ஒட்டிக் கரையோரங்களில் அதிகப்படியாக உள்ள பகுதிகளே வெள்ளநீர் வடிகால்கள். கோடைக் காலத்தில் இப்பகுதிகளில் பெரும்பாலும் தண்ணீர் செல்லாது. மழைக்காலத்தில் அதிகப்படியாக உள்ள நீரை இந்தப் பகுதிகள் தாங்கிக்கொண்டு ஆற்றோட்டத்துடன் செல்லும். இதனால் வெள்ளக் காலத்தில் பெருமளவு சேதம் குறைக்கப்படுகிறது. ஆனால், தற்போது எந்த ஆற்றங்கரையிலும் வெள்ளநீர் வடிகால்களைப் பார்க்க முடியவில்லை.

காரணம், அந்த வெள்ளநீர் வடிகால்களின் மீது கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. நல்ல உதாரணம்: சென்னை கோட்டூர்புரம் அடையாற்றின் கரையில்தான் தமிழக அரசின் வீட்டுவசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு பெரிய பரப்பில் அமைந்திருக்கிறது. அடையாற்றின் கரை முழுக்க இது போன்ற கட்டிடங்களைப் பார்க்கலாம். ஏன், அடையாறு வெள்ளநீர் வடிகாலின் மேலேதான் சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப்பட்ட ஓடுதளப் பகுதியே அமைந்திருக்கிறது.

அதேபோல பக்கிங்ஹாம் கால்வாயை மூடித்தான் பறக்கும் ரயில் செல்கிறது. ஆங்கிலேயர்கள் ஆண்டபோது பஞ்ச காலத்தில் மக்களுக்கு வேலை கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது பக்கிங்ஹாம் கால்வாய். பழவேற்காட்டில் தொடங்கி மரக்காணத்தில் நிறைவடையும் இந்த செயற்கைக் கால்வாய், சென்னையில் ஓடும் கொசஸ்தலையாறு, கூவம், அடையாறு ஆகிய மூன்று முக்கிய ஆறுகளை இணைத்துச் செல்கிறது. இந்த ஆறுகளில் வெள்ளம் வரும்போது, பக்கிங்ஹாம் கால்வாய் தண்ணீரைத் தாங்கிச் சென்றுள்ளது.

வெள்ளம் எங்கே போகும்?

சென்னை போன்ற நகரங்களில் பெருமளவு உள்ள சதுப்புநிலங்கள், இயற்கை ஏரிகள், குளங்கள், செயற்கை ஏரிகள், குளங்கள் போன்றவை தண்ணீர் உறிஞ்சியை (ஸ்பாஞ்ச்) போல செயல்படுகின்றன. மழைக் காலத்தில் கூடுதல் நீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும் இந்த நீர்நிலைகள், நிலத்தடி நீர்மட்டத்தை பெருமளவு உயர்த்துகின்றன. அது மட்டுமல்லாமல் கோடைக் காலத்துக்குத் தேவையான நன்னீரையும் வழங்குகின்றன. சென்னையின் பெரும்பாலான புதிய கட்டுமானங்கள், கட்டிடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் பலவும் இந்த நீர்நிலைகளின் கரைகள் மட்டுமின்றி, நீர்நிலைகளின் மீதே அமைந்திருக்கின்றன. மிகச் சிறந்த உதாரணம், பிரம்மாண்டமான பள்ளிக்கரணை (சதுப்பு நிலம்) இன்றைக்கு சிற்றேரிபோல சுருங்கிக் கிடப்பதுதான்.

வெள்ளநீர் வடிகால்களும், செயற்கைக் கால்வாய்களும் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. இயற்கையாக வெள்ளத்தை மட்டுப்படுத்தக்கூடிய சதுப்புநிலங்களும் காடுகளும் கொஞ்சம்கொஞ்சமாக விழுங்கப்பட்டுவிட்டன. இத்தனைக்கும் பிறகு வெள்ளம் வேறு எங்கு போகும்? எந்தத் தடங்கலும் இல்லாமல் பாய்ந்து வந்து மனிதக் குடியிருப்புகளுக்குள் நுழைகிறது.

உடனடித் தேவை

நகர்ப்புற வளர்ச்சி காரணமாக வெள்ளநீர் வடிகால்களும் நீர்பிடிப்புப் பகுதிகளும் சீரழிந்துபோனதே வெள்ளங்களின் தீவிரத்துக்கு காரணம் என்று 11-வது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கை உறுதி செய்கிறது. இப்படி வெள்ளத்தைத் தாங்கும் கட்டமைப்புகள் ஏற்கெனவே சிதைக்கப்பட்டுவிட்ட நிலையில், பருவநிலை மாற்றம் இன்னும் தீவிரமான பருவமழை, புயல்கள், கணிக்க முடியாத இயற்கைச் சீற்றங்களை எதிர்காலத்தில் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதுவரை கண்மூடித்தனமாக இருந்த எல்லா விஷயங்களையும் முறைப்படுத்தும் முயற்சிகளை அவசரமாகத் தொடங்க வேண்டிய நேரம் இது.

அது மட்டுமல்லாமல் திட்டவட்டமான, பயன்தரக்கூடிய 'வெள்ள முன்னறிவிப்பு' மட்டுமே எதிர்கால வெள்ள பாதிப்புகளைத் தடுக்க உதவும். வெள்ள முன்னறிவிப்பு கொடுப்பதற்காக மத்திய அரசின் மத்திய நீர்க் குழு நாடு முழுவதும் 172 நிலையங்களை அமைத்திருக்கிறது. அதேநேரம், இந்த வெள்ள முன்னறிவிப்பு நிலையங்கள் உரிய நேரத்தில், துல்லியமான முன்னறிவிப்புகளைக் கொடுத்தால் மட்டுமே வெள்ள சேதத்தைத் தடுக்க முடியும். நடைமுறையில் வெள்ள முன்னறிவிப்புக்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் எடுப்பதற்கும் இடையிலான நேர இடைவெளி மிகவும் குறைவாக இருக்கிறது. வெள்ளத்தை எதிர்கொள்ளும் அரசின் முன்தயாரிப்பு நிலையும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது.

அரசு எடுக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வலியுறுத்தும் அதேநேரம், வெள்ளத்தை எதிர்கொள்ள அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் என்ன வழிமுறைகளைக் கடைப்பிடித்தார்கள் என்று தேட வேண்டிய நேரம் இது. நாம் அனுபவித்த வெள்ளங்களில் எதிர்கொண்ட பாதிப்புகளிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது. இவற்றை உள்வாங்கிக்கொண்டு எதிர்காலத்தைத் திட்டமிட வேண்டும். மாறாக இயற்கையைப் பழித்துக்கொண்டிருப்பதால், எந்தப் பிரயோஜனமும் கிடைக்கப்போவதில்லை. கற்றுக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதுதான், இப்போதைய அவசர, அவசியத் தேவை.
தேவை முன்னெச்சரிக்கை

l வெள்ளம் வேகமாகச் செல்லும் பகுதிகளிலோ, தரைப்பாலத்திலோ நடந்தோ அல்லது வண்டியிலோ செல்லாதீர்கள். இரண்டடி உயரத்துக்கு ஓடும் வெள்ளம்கூட ஆளையும் வண்டியையும் அடித்துச் செல்லும் வேகம் கொண்டது.

l வெள்ளநீர் வடிய சாக்கடைக் குழிகளும் திறக்கப்பட்டிருக்கலாம், அதனால் எச்சரிக்கை தேவை.

l வெள்ளநீரில் வேதிப்பொருட்கள், பாக்டீரியா, நோய்க்கிருமிகள் இருக்கலாம். வெள்ள நீரில் கால் வைத்தால் சோப்பைக் கொண்டு கை, கால்களை நன்றாகக் கழுவிவிடுங்கள்.

எப்படி வருகிறது, எப்படித் தடுப்பது?

நகர்ப்புறங்களில் வெள்ளம் உருவாகுவதற்கும், வெள்ளம் வருவதைத் தடுப்பதற்கும் இரண்டே காரணங்கள்தான் இருக்கின்றன. முதலாவது நகர அமைப்பு. இரண்டாவது வெள்ளத்துக்கான காரணங்கள் குறித்த பரவலான விழிப்புணர்வு.

நகரில் கட்டப்படும் ஒவ்வொரு கட்டுமானமும் முறைப்படியான அனுமதிகளைப் பெற்று கட்டப்பட வேண்டும். அது மட்டுமல்லாமல் அனுமதி வழங்குபவர்கள்தான் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். சம்பந்தப்பட்ட கட்டுமானம் நீர்நிலை, ஆறு, கால்வாயை ஆக்கிரமிக்காமல் இருக்கிறதா, நீர்ப்போக்கை தடை செய்யாமல் இருக்கிறதா, கட்டுமானத்துக்கு உரிய வடிகால் வசதி இருக்கிறதா, வடிகால் உரிய முறையில் பராமரிக்கப்படுகிறதா என்றெல்லாம் பார்க்க வேண்டும். நகரம் இப்படி முறைப்படி திட்டமிட்டு கட்டப்பட்டால்தான், எதிர்காலத்தில் வரப்போகும் வெள்ளத்தைத் தடுக்க முடியும்.

நகர்ப்புறங்களில் பெருமளவு மழைநீர் வடிகால்கள், கழிவுநீர் சாக்கடைகள் சரியாக மூடப்படுவதில்லை, தொடர்ச்சியாக பராமரிக்கப்படுவதில்லை. அது மட்டுமல்லாமல் பெருமளவு பிளாஸ்டிக் பைகளும், குப்பைகளும் வடிகால்கள், சாக்கடைகளை அடைத்துக்கொள்வதால்தான் சாலைகளில் வெள்ளநீர் தேங்குகிறது.

மழையோ, வெள்ளமோ வரும்வரை அரசும் வடிகால்களை முறையாகப் பராமரிப்பதில்லை, மக்களும் அவை அடைத்துக்கொள்வதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. எனவே வெள்ளமோ, மழைநீர் தேங்குவதோ இயற்கையாக மட்டும் நடப்பதில்லை. அரசினுடைய, நம்முடைய அலட்சியமும்தான் வெள்ளத்துக்குப் பெருமளவு காரணம். இவற்றைக் களைந்தாலே பிரச்சினைகள் தீவிரமடையாமல் தடுக்க முடியும்.

நகர்ப்புற வெள்ளம்: முதன்மைக் காரணங்கள்

வெள்ள வடிகால்கள் ஆக்கிரமிப்பு

கோடைக் காலத்தில் ஆறுகளில் தண்ணீர் குறைவாக இருக்கும்போது அதன் கரைப் பகுதிகளும் அதை ஒட்டியிருக்கும் பகுதிகளும் காய்ந்தே கிடக்கும். இவை வெள்ளநீர் வடிகால்கள். இந்தப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கட்டிடங்கள் கட்டுவது, வேறு செயல்பாட்டுக்காகப் பயன்படுத்துவது வெள்ளக் காலத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். வெள்ளம் வர ஆரம்பித்தவுடன் பாதிக்கப்படுவது இந்தப் பகுதிகள்தான். அது மட்டுமல்லாமல், வெள்ளநீர் நேராக ஆற்றோட்டத்துடன் செல்லாமல் பக்கவாட்டில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுவதற்கும் வெள்ளநீர் வடிகால்கள் ஆக்கிரமிக்கப்படுவதே காரணம்.

மழைநீர் வடிகால் அடைப்பு

இயற்கையாக மழைநீர் வடிந்து ஆறுக்கோ கடலுக்கோ செல்வதை மழைநீர் வடிகால்களில் தேங்கும் பிளாஸ்டிக், குப்பை போன்ற அடைப்புகள் தடுக்கின்றன. இதன் காரணமாக ஓரிடத்தில் பெய்யும் மழை, இயல்பாக தாழ்வான பகுதிக்கு ஓட வழியில்லாமல், ஒரே இடத்திலேயே தேங்க ஆரம்பிக்கிறது.

No comments:

Post a Comment