ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் தொகையை 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.ஓய்வு பெற்ற ஆசிரியர்திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான், கடந்த 8.10.2007 அன்று திருச்சி மாவட்டம் மால்வோய் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். 31.5.2013 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றேன். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் எனது சம்பளத்தில் இருந்து மொத்தம் 3 லட்சத்து 60 ஆயிரத்து 684 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. எனக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியத் தொகையை அனுமதிக்கும்படி பள்ளி தலைமை ஆசிரியர், தலைமை கணக்காயருக்கு திட்ட அறிக்கை அளித்தார்.
அரசின் பரிசீலனையில் உள்ளது
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசின் தகவல் தொகுப்பு விவர மையத்தின் (‘டேட்டா சென்டர்’) ஆணையர் கவனித்து வருவதாக கூறி, திட்ட அறிக்கையை, தகவல் தொகுப்பு விவர மையத்துக்கு தலைமை கணக் காயர் அனுப்பி வைத்தார். அதன்பின்பும், ஓய்வூதியத் தொகை வழங்கப்படாததால் தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினேன்.
இதைத்தொடர்ந்து, எனக்கு ஓய்வூதிய தொகை வழங்குவது தொடர்பான விவகாரம் அரசின் பரிசீலனையில் இருப்பதாக நிதித்துறை துணைச்செயலாளர் தெரிவித்தார். இருந்தபோதிலும் இதுவரை ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. ஓய்வூதியத் தொகை வழங்கப்படாததால் ஓய்வு காலத்தில் அன்றாட வாழ்க்கையை நடத்துவதில் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, எனக்கு கிடைக்க வேண்டிய பங்களிப்புஓய்வூதியத் தொகையை, வட்டியுடன் சேர்த்து உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
2 மாதத்துக்குள் வழங்க வேண்டும்
இந்த மனு நீதிபதி டி.அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சேவியர்ரஜினி ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், மனுதாரருக்கு வழங்க வேண்டிய பங்களிப்பு ஓய்வூதியத் தொகையை தமிழக அரசின் நிதித்துறை செயலாளர், அரசின் தகவல் தொகுப்பு விவர மைய ஆணையர் ஆகியோர் 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், பங்களிப்பு ஓய்வூதியத் தொகை உரிய காலத்தில் வழங்கப்படாததால் அந்த காலதாமதத்துக்கு வட்டி வழங்குவது குறித்து வழக்கின் இறுதித் தீர்ப்பின் போது முடிவு செய்யப்படும் என்று நீதிபதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment