Pages

Wednesday, March 2, 2016

தேர்தல் தேதி அறிவித்த பிறகு எந்த திட்டங்களையும் அறிவிக்க கூடாது: தேர்தல் கமிஷன்


தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி இந்த வாரம் கடைசியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டு இருக்கிறது.

புதிய திட்டங்கள், அறிவிப்புகளை முன்தேதியிட்டு வெளியிடுவது உள்ளிட்ட விதிமுறை மீறல்களை முற்றிலுமாக தடுக்க அதிகாரிகளுக்கு கட்டுப்பாடுகளை தேர்தல் கமிஷன் விதித்துள்ளது.


இதுகுறித்து தமிழக அரசின் அனைத்துத் துறைகளின் முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்களுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்த பிறகு அமலுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிகளின்படி, எந்தவொரு புதிய திட்டங்களை அறிவிப்பதோ, புதிய அரசாணைகளை வெளியிடுவதோ கூடாது.

ஆனாலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஓரிரு நாட்கள் கழித்து, முன்தேதியிட்ட அரசாணைகள் வெளியிடப்படுவதாகவும்; தேர்தல் தேதி வெளியிடப்படுவதற்கு முன்பே அந்த அரசாணைகளை வெளியிட்டது போல் காட்டிக்கொள்வதாகவும், முந்தைய தேர்தல்களின் போது புகார்கள் வந்தன.

இதுபோன்ற புகார்களை தவிர்க்கவேண்டும். இதைத் தவிர்ப்பதற்காக புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் தேதி அறிவிப்பு மீடியாக்களில் வெளியானதும், அரசாணை பதிவேட்டில் பதியப்பட்ட கடைசி அரசாணைக்குக் கீழே ஒரு எல்லைக் கோட்டை சம்பந்தப்பட்ட துறையின் செயலாளர் போடவேண்டும்.

அந்த கோடு போடப்பட்ட பக்கத்தை அவர் புகைப்படம் எடுக்கவேண்டும். அதை இணைத்து, தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துக்கு, மீடியாவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட செய்தி வெளியான 2 மணிநேரத்துக்குள் அனுப்பி வைக்கவேண்டும். இது தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் ஆவணமாக பதியப்படும்.

அரசாணை தொடர்பாக ஏதாவது புகார்கள் கூறப்பட்டால் அதற்கு உடனே பதிலளிக்க முடியும். மேலும், தவறான குற்றச்சாட்டை கூறுவதும் தவிர்க்கப்படும். அரசுச் செயலாளர்கள் யாரும் தலைமையகத்திற்கு வெளியே இருந்தால், இதற்காக கீழ் நிலை அதிகாரி ஒருவரை நியமிக்கவேண்டும். அவர் மேற்சொன்ன நேரத்துக்குள் அந்த தகவலை தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment