மக்களவையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் ஆட்சேபனைக்கு மத்தியில் ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மசோதா நிறைவேறியது.
மானியத் திட்டங்கள் மற்றும் நேரடி பணப்பயன் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க வகை செய்யும் ஆதார் மசோதா குறித்து மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. மசோதாவை ஆதரித்து பேசிய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மசோதா மீது 7 ஆண்டுகளாக நடந்த விவாதம் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், மானியத்துக்காக செலவிடப்படும் அரசுப் பணத்தை கையாள்வதில் கவனம் செலுத்துவதே இந்த மசோதாவின் நோக்கம் என்பதால் இது பண மசோதா என்றும் அவர் அறிவித்தார்.
‘உண்மையான பயனாளிகளுக்கு மானியம் சென்று சேர இந்த மசோதா உதவும். இதன் மூலம் ஏராளமான பணத்தை சேமிக்க முடியும். உதாரணமாக, சமையல் எரிவாயு மானியத்தை ஆதார் எண் மூலம் அனுப்பிய வகையில் அரசுக்கு 15000 கோடி ரூபாய்க்கு மேல் மிச்சமாகியிருக்கிறது’ என்றும் ஜெட்லி தெரிவித்தார்.
பிஜு ஜனதா தளம் உறுப்பினர் மகதாப் பேசுகையில், தற்போதைய வடிவில் இதை சட்டமாக்கினால், தனியுரிமையில் ஊடுருவ சாத்தியம் உள்ளதால் இதனை பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது கருத்தினை காங்கிரஸ் எம்.பி. மல்லிகார்ஜுன கார்கே, அ.தி.மு.க. உறுப்பினர் பி.வேணுகோபால் ஆகியோர் ஆதரித்தனர்.
எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கைக்கு மத்தியிலும் மக்களவையில் பா.ஜ.க. தலைமையிலான அரசுக்கு போதிய பெரும்பான்மை இருப்பதால் இந்த மசோதா பண மசோதாவாக எளிதாக நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் மெஜாரிட்டி இல்லாததால் வாக்கெடுப்பு நடத்தாமல் மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.
ஆனால், பண மசோதா ஒரு முறை மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டால் மாநிலங்களவை அல்லது மேல்சபையில் விவாதம் மட்டுமே நடத்த முடியும். திருத்தங்கள் எதுவும் செய்ய முடியாது. உடனடியாக விவாதம் நடத்த வேண்டும். அதுவும் தாக்கல் செய்யப்பட்டு 14 நாட்களுக்குள் விவாதம் நடத்தப்படாவிட்டால் அது நிறைவேறியதாகவே கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment