மார்ச் தொடக்கமே வெளுத்து வாங்கும் வெயில் காலமாக மாறிவிட்டதால், அடுத்த கல்வியாண்டிலிருந்து பள்ளித் தேர்வுகளை ஒரு மாதத்துக்கு முன்பாக பிப்ரவரி மாதத்திலேயே நடத்தினால் என்ன என்ற கேள்வி கல்வியாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
பருவநிலை மாற்றம் என்றழைக்கப்படும் மாறுபட்ட காலநிலைச் சூழலில் மழைக் காலம் சுருங்கிப் போய், பரவலாக- சராசரியாக ஆண்டுக்கு 50 நாள்கள்தான் மழை பெய்கிறது. ஆனால், பல நாள்கள்
பெய்ய வேண்டிய மழையின் அளவு, ஓரிரு நாள்களில் கொட்டித் தீர்க்கத் தொடங்கிவிட்டது.
இதேபோலத்தான் கோடை காலமும் மாறியிருக்கிறது. ஒரு காலத்தில் ஏப்ரல், மே மாதங்களை வெயில் காலம் என்பார்கள். இப்போதெல்லாம் அப்படியல்ல.
தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்திலேயே வெயில் மிகக் கடுமையாக அடிக்கத் தொடங்கிவிட்டது. சராசரியாக 10 மாவட்டங்கள் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியிருக்கின்றன.
இன்னும் சித்திரை பிறக்கவே 15 நாள்கள் இருக்கின்றன. அதன் மத்தியில் கத்தரி வெயில் வேறு பாக்கியிருக்கிறது. இந்தச் சூழலில்தான் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகளை அடுத்த கல்வியாண்டில் ஒரு மாதம் முன்னதாக பிப்ரவரி மாதத்துக்கு மாற்றி நடத்தினால் என்ன என்ற கேள்வியை கல்வியாளர்கள் முன்வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஜூன் முதல் நாள் பள்ளிகள் திறக்கப்பட்டால் அடுத்த மார்ச் இறுதி வரை 225 வேலைநாள்களாக இயங்கியாக வேண்டும் என்பது மட்டும்தான் தடங்கலாக இருக்கும்.
அதையும்கூட கற்கும் திறனைக் குறைக்காமல் பாடத் திட்டத்தின் அளவைக் குறைத்து மாற்றியமைக்க முடியும் என்கிறார் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கல்வி என்பது பண்பாட்டின் கூறு. எனவே, உள்ளூர் நிலப்பரப்பு, தட்பவெப்ப நிலை ஆகியவற்றின் நிலையைக் கருத்தில் கொண்டு பள்ளிகளின் நேரம், அட்டவணை போன்றவற்றையும் அமைக்க வேண்டும். எல்லா இடங்களுக்கும் ஒரே மாதிரியான சூழல் இருப்பதில்லை. எதையும் தேசிய அளவில் தீர்மானிக்க முடியாது.
எனவே, கல்வி அட்டவணையும் மாறுதலுக்கு உள்பட்டதுதான். பின்லாந்து நாட்டில் தற்போது நான்காவது தலைமுறைக் கல்வியாக கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்படியான மாற்றங்கள் குறித்து இங்கே விவாதிக்கவே தயங்குகிறார்கள்.
தற்போதுள்ள கல்விக் கட்டமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வது சாத்தியமில்லை. இதற்காகத்தான் பொதுப் பள்ளி, அருகமைப் பள்ளி முறைகள், தாய்மொழி வழிக் கல்வி போன்றவற்றை முன்வைக்கிறோம்.
தேர்வுக் காலத்தை ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிடுவது என்பதற்கு வேலை நாள்கள் தடையாக இருந்தால் அதற்கேற்ப பாடத் திட்டத்தை கற்கும் திறன் குறையாமல் குறைத்துத் திட்டமிடலாம் என்கிறார் அவர்.
இந்தக் கல்வியாண்டில் எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட மழலையர் கல்விக் கூடங்கள் மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவு பெறுகின்றன. மற்ற அனைத்து வகுப்புகளைக் கொண்ட பள்ளிகளும் தேர்வுக்காக ஏப்ரல் 21ஆம் தேதி வரை திறந்திருக்கும்.
அதிலும், குறிப்பாக எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வுக்காக மற்ற வகுப்பினருக்கு வெயில் சுட்டெரிக்கும் பிற்பகல் 2 மணிக்கு மேல் வகுப்புகளைத் தொடங்கி, மாலை 5 மணி வரை நடத்தியும் வருகின்றனர். தேர்தல் பரபரப்புகளுக்கு மத்தியில் தேர்வு அறைகளில் போதுமான அளவில் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டனவா என்பதுகூட உறுதி செய்யப்படவில்லை!
No comments:
Post a Comment