பள்ளி ஆசிரியர்களுக்கு, சட்டசபை தேர்தல் பயிற்சி வகுப்பு துவங்க உள்ள நிலையிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கவில்லை. எனவே, தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாகலாம் என, தெரிகிறது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளையுடன் பொதுத் தேர்வுகள் முடிகின்றன. மொழி பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது; முக்கிய பாடங்களுக்கு, ஏப்., 6 முதல் விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது.
இரண்டு வாரங்களில்...:
பத்தாம் வகுப்புக்கு மார்ச், 29ல், மொழி பாடத்தேர்வுகள் முடிந்து விட்டன. ஏப்., 11 வரை முக்கிய பாடங்களுக்கு தேர்வு நடக்க உள்ளது. ஆனால், மொழி பாடங்களின் விடைத்தாள் திருத்தம் குறித்து, தேர்வுத்துறை இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை. தமிழக சட்டசபைக்கு மே, 16ல் தேர்தல் நடக்க உள்ளதால், ஆசிரியர்கள் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்; அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள், இரண்டு வாரங்களில் துவங்க உள்ளன.
நெருக்கடி நிலை:
எனவே, விடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்வதா; தேர்தல் பணிக்கு செல்வதா என, ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர்.கடந்த ஆண்டில், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கும்போதே, 10ம் வகுப்புக்கு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கி விட்டது. ஆனாலும், மே மூன்றாம் வாரம் தான் தேர்வு முடிவுகளை வெளியிட முடிந்தது. இந்த முறை தேர்தல் நடக்க உள்ளதால், விடைத்தாள் திருத்தும் பணி தாமதமாக துவங்கினால், குறுகிய நாட்களில் அதிக தாள்களை திருத்த வேண்டிய நெருக்கடி நிலை ஏற்படும். அதனால், மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி ஏற்படும் ஆபத்துள்ளது.
கூடுதல் நேரம் தேவை:
இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு பொது செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது:பிளஸ் 2வில், தனித்தனி பாடப்பிரிவுகள் இருப்பதால், முக்கிய பாடங்களின் விடைத்தாள்கள் பிரித்து கொடுக்கப்படும். 10ம் வகுப்புக்கு, 10.40 லட்சம் பேரும் மொழி பாடம் முதல், முக்கிய பாடங்கள் வரை எழுதியிருப்பர். அனைத்தையும் ஆசிரியர்கள் திருத்த வேண்டும். எனவே, 10ம் வகுப்புக்கு விடைத்தாள்களை திருத்த கூடுதல் நேரம் தேவை.
இந்த முறை தேர்தல் பயிற்சி வகுப்புகள் நெருங்கி விட்டதால், ஏப்ரல், முதல் வாரத்தில், 10ம் வகுப்புக்கு மொழி பாடத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை துவக்கினால் தான், ஆசிரியர்களுக்கு நெருக்கடி குறைந்து, மதிப்பீடு குழப்பமின்றி நடக்கும். தேர்வு நடக்கும் நாட்களுக்கு மட்டும், ஆசிரியர்களுக்கு தேர்வு பணியை கொடுத்து விட்டு, பிற நாட்களில் மொழி பாட திருத்தத்தை மேற்கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment