Pages

Thursday, March 17, 2016

மாணவர் எண்ணிக்கையில் மத்திய அரசு கிடுக்கிபிடி!


மத்திய அரசு,
பள்ளித்தொகுப்பு தகவல்களையும் , மாணவர் , ஆசிரியர் தகவல்களையும் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுத்து வருவதால், மாநில கல்வித்துறையினர் கிலியில் ஆழ்ந்துள்ளனர்.

மாணவர்களின் உண்மையான எண்ணிக்கை மட்டுமே தெரியவரும் என்பதால் , இனி வரும் ஆண்டுகளில், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு கணிசமாக குறையும் என,
எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையில், அனைவருக்கும் கல்வி திட்டம் , அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் ,
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இதில், மாணவ , மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப , ஆசிரியர் நியமனம், அவர்களுக்கான சம்பளம் ,
வகுப்பறை கட்டிடம் , புதிய பள்ளிகள் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நிதி ஒதுக்கீடு வழங்கி வருகிறது. யுடைஸ் எனும் பள்ளி தொகுப்பு தகவல்களை அடிப்படையாக கொண்டு, மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது. நடப்பு ஆண்டில் , நியூடைஸ் எனும் , புதிய பள்ளி தகவல் தொகுப்பை சேகரிக்க திட்டமிட்டுள்ளது. அதாவது ஏற்கனவே பள்ளிகளில் , மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விபரங்களுடன், ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் ,
எமிஸ் எனும் தொகுப்பில் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும் ,
நியூடைஸ் தொகுப்பில் இணைக்கப்பட உள்ளன. இதனால்,
உண்மையான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விபரங்களை ,
துல்லியமாக மத்திய அரசு கணக்கிட முடியும்.
போலியாக கணக்கில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர் எண்ணிக்கை கண்டறியப்படும் என்பதால், மாநிலங்களுக்கு கிடைக்கும் நிதி ஒதுக்கீடும் கணிசமாக குறைவதுடன் ,
ஆசிரியர்களின் சம்பளமும் நிறுத்தப்படும் சூழல் உருவாகும்.
இதுகுறித்து மத்திய மனிதவளத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
மாநிலங்களை பொறுத்தவரை, மத்திய அரசிடம் நிதி ஒதுக்கீடு பெற வேண்டும் என்ற நோக்கில்,
அதிக மாணவர்களை கணக்கில் காட்டி விடுகிறது. தற்போது, அமல்படுத்தப்பட உள்ள நியூடைஸ் மூலம்,
மாணவர்களின் உண்மையான நிலவரம் தெரியவரும். நடப்பு கல்வியாண்டில், ராஜஸ்தான் மாநிலத்தில் 6 லட்சம் மாணவர்கள் உபரியாக கணக்கில் காட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும், பல பள்ளிகளில், ஆசிரியர்கள் தங்கள் வேலையை தக்க வைத்துக்கொள்ள, போலி மாணவர்களின் விபரங்களை அளித்து வந்தனர். உண்மையான எண்ணிக்கை தெரியவரும் போது,
ஆசிரியர் பணியிடம் குறைப்பு, சம்பளம் நிறுத்தம்,
புதிய பள்ளிகள் துவங்க தடை, பராமரிப்பு மானியம் உள்ளிட்ட அனைத்திலும், நிதி ஒதுக்கீடு குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment