இன்று நடைமுறையில் உள்ள கல்வி உரிமைச் சட்டம் அருகமைப் பள்ளியில் மட்டுமே ஒவ்வொரு வட்டாரத்தில் உள்ள அனைத்துப் பிரிவினர் குழந்தைகளும் சேர்க்கப்படவேண்டும் என்பதைப் பற்றிய தெளிவான விதி எதையும் வலியுறுத்தவில்லை. இதன் விளைவாக இன்றைக்கு பெரும்பாலான தனியார் பள்ளிகள் 50 கி.மீ தூரத்தில் இருந்து கூட குழந்தைகளை பள்ளி வாகனங்களில் அன்றாடம் அழைத்து வருகின்றனர். பள்ளி தொடங்கும் நேரத்திற்கு முன்பாக, மிக அதிக தூரத்தில் இருந்து, அருகருகே உள்ள குடியிருப்புப் பகுதி நிறுத்தங்களில் கணக்கில்லாமல் நின்று, துரிதகதியாக குழந்தைகளை ஏற்றி, இறக்கி பள்ளி வாகனங்களை இயக்கவேண்டி இருப்பதால் வேகமாக, அவசரமாக ஓட்டுநர்கள் பள்ளி வாகனங்களை இயக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். இதுவே பள்ளிக் குழந்தைகள் அடிக்கடி பள்ளி வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதற்கும் காயமடைவதற்கும் முக்கியக் காரணமாகிறது.
சில தனியார் பள்ளிகள் ஒரு போக்குவரத்துக் கழகப் பணிமனையே நடத்தும் அளவிற்கு நூற்றுக்கனக்கில் பள்ளி வாகனங்களை இயக்கி வருகின்றன. கல்விக் கட்டணச் சுமைக்கு மட்டுமல்லாமல் அதிகப்படியான பள்ளி வாகனக் கட்டணச் சுமைக்கும் பெரும்பாலான பெற்றோர்கள் ஆளாகும் நிலையும் இதனால் ஏற்படுகிறது.
அருகமைப்பள்ளியில் மட்டுமே குழந்தைகள் சேர்க்கப்படவேண்டும் என்ற அரசு விதிமுறையின்மையால் மிகத்தொலைவில் உள்ள பள்ளியில் படிக்கும் பெரும்பாலான குழந்தைகள் நாள்தோறும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இதனால் குழந்தைகள் ஓய்வு நேரத்தைக்கூட பேருந்துப் பயணத்தில் இழக்கவேண்டியுள்ளது. பள்ளிக்கு வந்து செல்வதாலேயே குழந்தைகள் சோர்வடைந்துவிடுகின்றனர். இது குழந்தைகளின் கற்றலுக்கும் இடையூரானது.
வருங்காலக் குழந்தைகளையாவது மிகக் கொடிய துயரங்களில் இருந்து மீட்டெடுத்து மகிழ்ச்சியாக வாழச் செய்திடவும் புதியதொரு மேன்மையுடைய சமத்துவமுடைய உண்மையான அறநெறித் தூய்மையுடைய குடிநாயகச் சமூகத்தில் வாழச்செய்திடவும் ஏற்ற கல்விக் கொள்கைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்துவது அனைத்து அரசியல் கட்சிகளின் கடமையாகும். இதற்காகக் குரல் கொடுக்கவேண்டியது, போராடவேண்டியது கல்விப் பணியாற்றும் ஆசிரியர் சமூகத்தின் முதன்மைக் கடமை.
No comments:
Post a Comment