Pages

Tuesday, March 15, 2016

எஸ்எஸ்எல்சி மொழிப்பாடத் தேர்வை தமிழில்தான் எழுதவேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது:

கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் தமிழைத் தான் மொழிப்பாடமாக எழுதவேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல், அனைத்து மாணவர்களையும் அவரவர் படித்த மொழியிலேயே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழக அரசு 2006-ம் ஆண்டு கொண்டுவந்த கட்டாய தமிழ் கற்றல் சட்டப்படி, சிறுபான்மையினர் பள்ளி உட்பட அனைத்து பள்ளிகளிலும் கண்டிப்பாக தமிழை முதல் பாடமாக கற்பிக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி, கடந்த 2006-ல் 1-ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் தற்போது, 10-ம் வகுப்பு தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கு இன்று (மார்ச் 15) முதல் பொதுத்தேர்வு நடக்கவுள்ளது. இதில் தமிழ் அல்லாத பிறமொழியை மொழிப் பாடமாக எடுத்தவர்களும், தமிழில் கட்டாயம் தேர்வு எழுத வேண்டிய சூழல் இருந்தது.

இந்த நிலையில், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிப் பாடங்கள் படித்த மாணவர்கள் தங்களது மொழியிலேயே மொழிப் பாடத் தேர்வு எழுத அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இவர்களது கோரிக்கையை பள்ளிக்கல்வித் துறை நிராகரித்தது.

இதையடுத்து, சில மாணவர்களின் பெற்றோர் சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான முதல் அமர்வு, தமிழ் அல்லாத பிறமொழி பாடத்தை எடுத்து படித்த சுமார் 7 ஆயிரம் மாணவர்கள் தாங்கள் படித்த மொழியிலேயே தேர்வு எழுத அனுமதி வழங்கியது.

இதைத் தொடர்ந்து, வழக்கு தொடர்ந்த மாணவர்கள் மட்டும் பிறமொழித் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. இதனால், மற்ற மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். இச்சலுகையை தங்களுக்கும் வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடரப்பட்டது.

தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய முதல் அமர்வில் இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியதாவது:

10-ம் வகுப்பு தேர்வு எழுதுபவர்கள் தமிழ் மொழி தவிர பிற மொழிகளிலும் மொழிப் பாடத் தேர்வு எழுதலாம் என ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு காரணமாக தாமதமாக விண்ணப்பித்த மாணவர்களும் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோல, பிறமொழிப் பாடங்களில் தேர்வு எழுத அனுமதி அளிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தவர்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடராதவர்கள் என அனைத்து மாணவர்களும் தேர்வில் பங்கேற்கலாம்.

ஆனால், மாணவர்கள் தேர்வுக்கு முந்தைய நாளே தேர்வுத் துறை இயக்குநரகத்தில் விண்ணப்பித்திருக்க வேண்டும். முறையாக விண்ணப்பித்த அனைத்து மாணவர்களையும் அனு மதித்து, தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாத வகையில் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment