Pages

Wednesday, March 16, 2016


அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் துப்புரவாளர், பெருக்குபவர், காவலர் உள்ளிட்ட பணியிடங்களை தனியார் முகமை மூலம் நிரப்பவேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணைகளை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தனியார் முகமை
தமிழக பள்ளி கல்வித்துறை கடந்த 2007–ம் ஆண்டு ஒரு அரசாணை பிறப்பித்தது. அதில், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்பலாம். காவலர் பதவியில் 50 சதவீதத்தை நிரப்பிக்கொள்ளலாம். மீதமுள்ள 50 சதவீதத்தையும், துப்புரவாளர், பெருக்குபவர் உள்ளிட்ட தொழிலாளர்களை தனியார் முகமை (அவுட் சோர்சிங்) மூலம் நிரப்பிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டு இருந்தது.
அதேபோல 2010–ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட மற்றொரு அரசாணையில், ஆசிரியர் அல்லாத பிற பணியிடங்கள், 952 இடங்கள் காலியாக உள்ளன. இதில் 467 பணியிடங்களை தனியார் முகமை மூலமும், 485 பணியிடங்களை அரசு மானியத்துடன் முழு நேர ஊழியராகவும் நியமித்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டு இருந்தது
ரத்து
இந்த 2 அரசாணைகளையும் எதிர்த்து தனியார் பள்ளி நிர்வாகங்கள் பல சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக அரசு சட்டத்துக்கு உட்பட்டுத்தான் உத்தரவுகளை பிறப்பிக்க முடியும். தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த 2 அரசாணைகளும் சட்டத்துக்கு உட்பட்டது கிடையாது.
மேலும் பணியாளர்கள் நியமனத்துக்கு அரசிடம் முன் அனுமதி பெறவேண்டும் என்று மாவட்ட கல்வி அதிகாரி பள்ளிக்கூடங்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதையும் ஏற்க முடியாது. எனவே, இந்த 2 அரசாணைகளையும், மாவட்ட கல்வி அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகளையும் ரத்து செய்கிறேன்.
ஒப்புதல்
துப்புரவாளர், காவலர், பெருக்குபவர் உள்ளிட்ட பணியிடங்களை அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் நிரப்பியுள்ளது. இந்த பணி நியமனத்துக்கு 6 வாரத்துக்குள் தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment