இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. எனவே, விண்ணப்ப படிவங்கள் எங்கேயும் விற்பனை செய்யப்படாது. ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 15 முதல் பதிவு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு ஏப்ரல் 14-ம் தேதி அன்று வெளியிடப்படும். இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு ஆன்லைன் விண்ணப்ப முறை நடைமுறையில் இருந்தாலும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது மாணவர்களின் விருப்பமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஏப்ரல் 15-ம் தேதி முதல் பதிவுசெய்து கொள்ளலாம். இதற்கு கடைசி நாள் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகி 7 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு பதிவாளர் கணேசன் கூறினார்.
No comments:
Post a Comment