Pages

Tuesday, March 22, 2016

வங்கி வட்டி விகிதங்கள் குறைக்கப்படுமா?- ரிசர்வ் வங்கி

நிதிக்கொள்கைக்காக காத்திருப்பு
பிபிஎப் உள்ளிட்ட பல சிறு சேமிப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு வட்டியைக் குறைத்துள்ள நிலையில், வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட் மற்றும் கடனுக்கான வட்டி விகித நிர்ணயம் குறித்து ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக்கு பிறகு முடிவெடுக்க வங்கிகள் திட்டமிட்டிருக்கின்றன.
மத்திய அரசு சிறு சேமிப்புகளுக்கு வட்டி விகிதத்தை குறைத்துவிட்டதால் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வட்டி குறைப்பு செய்வதற்கான சூழல் உருவாகி உள்ளது. அதனால் வட்டி குறைப்பு முடிவினை ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக்கு பிறகு எடுக்க இருக்கிறோம் என்று பாங்க் ஆப் மஹாராஷ்ட்ராவின் நிர்வாக இயக்குநர் சுஷில் முனோத் தெரிவித்தார். வட்டி குறைப்பு செய்திருப்பதால் வங்கிகளில் இருந்து தபால் நிலையங்களுக்கு செல்வது தடுக்கப்படும் என்று மற்றொரு பொதுத்துறை வங்கியின் தலைவர் கூறியிருக்கிறார்.
ரிசர்வ் வங்கி முடிவை அறிவிக்க வசதியாக சேமிப்பு திட்டங்களின் வட்டி குறைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். வரும் ஏப்ரல் 5-ம் தேதி ரிசர்வ் வங்கியின் கடன் மற்றும் நிதிக்கொள்கை குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
இதுவரை ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 1.25 சதவீதம் அளவுக்கு குறைத்திருக்கிறது. ஆனால் வங்கிகள் சராசரியாக 0.70 சதவீத அளவுக்கு மட்டுமே வட்டி குறைப்பு செய்திருக்கின்றன.
மத்திய அரசு வட்டி குறைப்பு செய்தது வழக்கமான ஒரு நடவடிக்கையே என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:
இந்த வட்டி குறைப்பு மூலம் இதுவரை மந்தமாக இருந்த பொருளாதாரம் வேகமாக செயல்பட வாய்ப்பு உருவாகி உள்ளது. டெபாசிட்களுக்கு அதிக வட்டி வழங்கி கடன்களுக்கு குறைந்த வட்டி கொடுக்க முடியாது. இந்த இரண்டு வட்டி விகிதங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்தது. இப்போது இந்தியா குறைவான வட்டி விகிதத்தை நோக்கி சென்று வருகிறது. வட்டி விகிதத்தில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுவதால் இனி காலாண்டுகளுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்படும். தவிர வட்டி விகிதங்களை சந்தைதான் முடிவு செய்கிறது என்று கூறினார்.

No comments:

Post a Comment