மானியச்சுமையை குறைக்கும் நடவடிக்கையாக வசதி படைத்தவர்களுக்கு காஸ் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு முன்னதாக, மானியத்தை கைவிடுங்கள் என்ற பிரசார முழக்கத்தை மத்திய அரசு தொடங்கியது. இதன் மூலம் சேமிக்கப்படும் தொகை வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்க உதவியாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்தது. இதை ஏற்று ஏராளமானோர் காஸ் மானியத்தை கைவிட்டனர். இதற்கிடையில் ஆண்டு வருவாய் ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு காஸ் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தது. இது தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஆண்டு வருவாய் ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு சமையல் காஸ் இனி மானிய விலையில் வழங்கப்பட மாட்டாது. இதற்கிடையில் வரி செலுத்துவோரை கண்டறிந்து எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இதில் ‘உங்கள் ஆண்டு வருவாய் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்தால் அரசு உத்தரவுப்படி காஸ் மானியம் பெற உங்களுக்கு தகுதியில்லை. உங்கள் வருவாய் ரூ.10 லட்சத்துக்கு கீழ் இருந்தால் அதுகுறித்து காஸ் டீலரிடம் விவரங்களை சமர்ப்பிக்கவும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை செயலர் அஷுதோஷ் ஜிண்டால் கூறியதாவது: வரி செலுத்தும் பிரிவினருக்கு கடந்த ஒரு வாரமாக எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இதில் ஆண்டுக்கு 10 லட்சத்துக்கு மேல் வருவாய் இருந்தால் காஸ் மானியத்தை தானாக முன்வந்து கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம். சுமார் 3 லட்சம் பேர் ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். வருமான வரி துறை உதவியுடன் இந்த விவரங்களை பெற்றுள்ளோம். இவர்களுக்கு மானியம் ரத்து செய்யப்படுவதாக எஸ்எம்எஸ் அனுப்பி வருகிறோம். மக்கள் தாங்களாக வந்து வருவாய் விவரங்களை சமர்ப்பிக்கும் வரை காத்திருக்க நாங்கள் விரும்பவில்லை. எனவே ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் இருப்பது கண்டறியப்பட்டால், இனி புக்கிங் செய்யப்படும் காஸ் சிலிண்டரில் இருந்து அவர்களுக்கு மானியம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அஷுதோஷ் ஜிண்டால் கூறினார். தற்போது 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் ஆண்டுக்கு 12 எண்ணிக்கையில் மானிய விலையில் வழங்கப்படுகிறது. அரசு பிரசாரம் மூலம் இதுவரை 85.24 லட்சம் பேர் தானாக முன்வந்து மானியத்தை கைவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment