Pages

Monday, March 7, 2016

பொதுத்தேர்வு மாணவர்களை கலங்கடிக்காதீங்க!


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பீதி ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது' என, பறக்கும் படையில் உள்ள ஆசிரியர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. பிளஸ் 2 பொதுத்தேர்வில், முறைகேடுகளை கண்டுபிடிக்க, 3,000 பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள்; 15 ஆயிரம் முழு நேர உடற்கல்வி ஆசிரியர்கள்; 2,000 தொழிற்கல்வி ஆசிரியர்கள், பறக்கும் படையில் நியமிக்கப்பட்டு உள்ளனர். உடற்கல்வி ஆசிரியர்கள், 'டிரில்' மாஸ்டராக இருப்பதால், மாணவ, மாணவியரிடம் கடுமையாக நடந்து கொள்வதாக, சில மாவட்டங்களில் புகார் எழுந்தது.இதையடுத்து, 'மாணவ, மாணவியரை மிரட்டும் வகையில், அவர்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது' என, பறக்கும் படையில் உள்ள ஆசிரியர்களுக்கு, கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 'மாணவர்களை பெயரளவில் பிடித்து, காப்பியடித்ததாக பதிவு செய்யக்கூடாது. அதற்கான சாட்சி மற்றும் நடைமுறை விதிகளை பின்பற்றியே, பிடிக்க வேண்டும்' என்றும் அறிவுறுத்தி உள்ளனர். ஒரு மாணவர் காப்பியடித்தோ, 'பிட்' அடித்தோ பிடிபட்டால், அந்த மாணவரின் துண்டுத்தாள் அல்லது காப்பியடித்த தாளை, மாணவரின் கையெழுத்துடன், ஆவணமாக்க வேண்டும் மாணவர் அமர்ந்த அறையில், அந்த இடத்தின் வரைபடம் வரைந்து தர வேண்டும் மாணவர் பிடிபடும் போது இருந்த சாட்சிகளை, அடையாளம் காண வேண்டும்; தேர்வு அறை கண்காணிப்பாளரின் சாட்சி கட்டாயம் தேவை தேர்வுத் துறை ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி விசாரிக்கும் போது, சரியான வகையில், சாட்சிகள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கிடுக்கிப்பிடி விதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பெயரளவில் பார்வையிடவே முடிகிறது:இதுகுறித்து, உடற்கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஏற்கனவே எங்களை, 'ஆர்டர்லி' என்ற ஊழியர் போல் நடத்துகின்றனர். எங்களை பறக்கும் படையில் நியமித்துள்ள நிலையில், முறைகேட்டில் ஈடுபடும் மாணவரை பிடித்தால், அந்த அறையின் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க, நாங்கள் பரிந்துரைக்க முடியும். ஆனால், கண்காணிப்பாளர்கள், எங்களிடம் வாக்குமூலம் தர மறுக்கின்றனர். அவர்களில் பலர் தான் எங்களுக்கு உயரதிகாரிகள் என்பதால், பெயரளவில் தேர்வு அறையை பார்வையிடவே எங்களால் முடிகிறது. இதுபோன்ற கிடுக்கிப்பிடி உத்தரவுகளால், முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களை பிடிக்க முடியாத சூழல் தான் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment