Pages

Tuesday, March 8, 2016

746 மெட்ரிக். பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தாற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்படாது:

உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி
நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத 746 மெட்ரிக். பள்ளிகளுக்கு மே 31-ஆம் தேதி வரை வழங்கப்பட்ட தாற்காலிக அங்கீகாரம் மேலும் நீட்டிக்கப்படாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திங்கள்கிழமை உறுதியளித்தது.
 அரசு விதித்த நிபந்தனைகளின்படி, குறைந்தபட்ச நில அளவு, பிற கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிக். பள்ளிகள் வரும் மே 31-ஆம் தேதி வரை தொடர்ந்து செயல்பட பள்ளிக்கல்வித் துறை தாற்காலிக அங்கீகாரம் வழங்கியது. இதுதொடர்பாக 2015 ஆகஸ்ட் 18-இல் 2 அரசாணைகள் வெளியிடப்பட்டிருந்தன.


 இந்த அரசாணைகளை ரத்து செய்து, அங்கீகாரமில்லாத பள்ளிகளை 2015-16-ஆம் கல்வியாண்டின் இறுதிக்குள் மூடுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்படும் மாணவர்களை அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்றும் "மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குநர் நாராயணன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
 இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக் கல்வித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "746 பள்ளிகளிலும் படிக்கும் 5.12 லட்சம் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே தாற்காலிக அங்கீகாரம் நிபந்தனையின் அடிப்படையில் வழங்கப்பட்டது' என தெரிவிக்கப்பட்டது.
 இதையடுத்து, தாற்காலிக அங்கீகாரமானது மேலும் நீட்டிக்கப்படாது என அரசு வழக்குரைஞர் உறுதியளித்தார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment