அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை மூலம் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவ, மாணவிகள் 1,656 பேருக்கு ரூ. 1.49 கோடி கல்வி உதவித் தொகையை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் வழங்கினார்.
ஏழ்மை காரணமாக பள்ளிக் கல்வியுடன் படிப்பை நிறுத்தும் பள்ளி மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழ்மையில் உள்ள மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு உதவும் மனம் படைத்தவர்களின் நிதியுதவியைப் பெற்று இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜமுனாமத்தூர் மலைப் பகுதி மாணவ, மாணவியரும் இவ்வாண்டு பயன் பெற்றனர்.
பல்கலைக்கழகதத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத்தில் இந்தாண்டு தேர்வு செய்யப்பட்ட 1,656 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 1.49 கோடியை வழங்கி விசுவநாதன் பேசியதாவது:
மாவட்டம் கல்வியில் நீண்டகாலமாக பின் தங்கியிருந்தது. தற்போது முன்னேற்றம் அடையும் நிலையில், குறிப்பாக ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள் உயர்கல்வி பயில வேண்டும் என்று விரும்புகிறோம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கல்வி முக்கிய இடம் வகிக்கிறது.
கல்வியில் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் தலைமுறை முன்னேற்றம் காண வேண்டும் என்ற நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை வெற்றிப் பெறச் செய்வதன் மூலம் நாடு முழுவதும் இதைக் கொண்டுச் செல்ல வழிவகுக்கும் என்றார் விசுவநாதன்.
அறக்கட்டளை உறுப்பினர் சி.கைசர் அகமது வரவேற்றார். தொழிலதிபர்கள் வி.ஜி.சந்தோஷம், டி.சுந்தர்கணேஷ், குடியாத்தம் எம்எல்ஏ கு.லிங்கமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன், அறக்கட்டளை பொருளாளர் ஜே.ஜவரிலால் ஜெயின், செயலர் ஆர்.ஜெயகரன் ஐசக், உறுப்பினர்கள் வே.ப.நாராயணன், குமரகுரு, புலவர் வே.பதுமனார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment