Pages

Thursday, September 24, 2015

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான கையேட்டை இலவசமாக வழங்க கோரிக்கை

அரசு பொதுத் தேர்வு எழுதும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான கையேட்டை இலவசமாக வழங்கவேண்டும் என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இது குறித்து, மாவட்டச் செயலர் இளங்கோ தெரிவித்தது: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு எழுதும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான கையேட்டை, சிவகங்கை மாவட்டக் கல்வித் துறை விரைவில் வழங்க வேண்டும். கையேடுகளை நகல் எடுத்துக் கொடுக்கும் நிலை தவிர்க்கப்பட வேண்டும். மாணவர்கள் வழங்கிய வினாத்தாள் நிதி, மாவட்டக் கல்வித் துறையில் இருந்தால் அதன் மூலமாக கையேடு தயாரித்து இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யலாம். அல்லது மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகத்திலிருந்து கையேடு தயாரித்து மாணவர்களுக்கு தமிழக அரசு இலவசமாக வழங்க முன்வர வேண்டும்.

இந்தாண்டு நல்லாசிரியர் விருது, சிவகங்கை கல்வி மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் ஒருவருக்குக் கூட வழங்கப்படவில்லை. அடுத்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வழங்க மாவட்டக் கல்வித் துறை முன்வர வேண்டும்.

சிவகங்கை, தேவகோட்டை கல்வி மாவட்டங்களில் காலியாக உள்ள பள்ளி ஆய்வாளர் பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் மற்றும் பணப்பயன் தொடர்பான கோப்புகளை தாமதமின்றி விரைந்து முடிக்கவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment