Pages

Monday, September 28, 2015

கட்டாய ஓய்வு கொடுக்கும் புதிய சட்டம் அமல்: 50 வயதுக்கு மேல் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் கலக்கம்

மத்திய அரசில் 18 பெரிய துறைகள் உள்ளன. ராணுவம், பாதுகாப்பு, வெளியுறவு, மனித வள மேம்பாடு, எல்.ஐ.சி., தபால், பி.எஸ்.என்.எல்., கப்பல், வருமான வரி, சுங்கவரி உள்ள பல துறைகளில் ரெயில்வே மிகப் பெரிய துறையாகும். இந்த துறையில் மட்டும் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.அனைத்து மத்திய அரசு துறைகளிலும் மொத்தம் 34 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 


38 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். மத்திய அரசின் புதியகொள்கைக்கு எதிராக நவம்பர் 23–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபடப் போவதாக அறிவிப்பு கொடுத்துள்ளனர்.அந்நிய நேரடி முதலீடு, தனியார் மயம், ஆட் குறைப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளை கண்டித்து நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் மத்திய அரசு ஏற்கனவே உள்ள சட்டத்தை புதிதாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. 56(ஜெ), 56 (ஐ) ஆகிய விதியின் கீழ் 50 முதல் 55 வயதுடைய அல்லது 30 வருடம் சர்வீஸ் முடித்தவர்களை 3 மாதத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக 2 பேர் கொண்ட ஆய்வு கமிட்டியை அமைத்து செயல்படுத்தவும் அனைத்து துறை அதிகாரிகளும் இதனை உடனே பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவு கடந்த 4–ந்தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் இந்த புதிய உத்தரவால் அனைத்து ஊழியர்களும் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்துள்ளனர்.இதனால் ‘ஏ’ முதல் டி பிரிவுவரை உள்ள அதிகாரிகளும் ஊழியர்களும் பழி வாங்கப்படலாம் என்று கருதுகின்றனர்.நவம்பர் மாதம் நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தடுக்கவும் ஒடுக்குவதற்காகத்தான் புதிய சட்டத்தை தற்போது மத்திய அரசு அமல்படுத்துகிறது. இதன் மூலம் ஊழியர்களை கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக மத்திய தொழிற்சங்கங்கள், ரெயில்வே தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

இதுகுறித்து எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்க பொதுச் செயலாளர் பி.எஸ்.சூரிய பிரகாசம் கூறியதாவது:–இந்த புதிய சட்டத்தால் ரெயில்வே துறையில் உள்ள அனுபவமிக்க தொழிலாளர்கள், அதிகாரிகள் பாதிக்கப்படுவார்கள். சம்பள உயர்வு கட், பதவியிறக்கம் போன்று ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளான தொழிலாளர்களையும், அதிகாரிகளையும் நேர்மையற்ற திறமையற்றவர்களாக கருதி கட்டாய ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளது.


இந்த சட்டத்தைபயன்படுத்தி வேலை செய்ய தகுதி இல்லாதவர்கள் எனக் கூறி 50 வயதுக்கு மேல் உள்ளவர்களை வெளியேற்ற மோடி அரசு சதி செய்கிறது. சரியாக வேலை செய்யவில்லை என்று காரணம் காட்டி வீட்டிற்கு அனுப்புவதற்கு வழி வகுக்கிறது. காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நசுக்கத்தான் இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.இதனை உடனேவாபஸ் வாங்க வேண்டும். வாபஸ் வாங்கும் வரை போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment