Pages

Wednesday, September 23, 2015

நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் 30 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு தொழிற் பயிற்சி

‛‛நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் 30 ஆயிரம் மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்கப்படும்’’ என தொழிற் பழகுநர் பயிற்சி வாரியத்தின் தென்மண்டலஇயக்குனர் தெரிவித்துள்ளார்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், மாணவர்கள் தொழிற் பயிற்சி பெறுவதற்கான சேவை அளிப்பதற்காக www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தை தொடங்கி உள்ளது. இதன் சிறப்பம்சங்கள் குறித்து, தொழிற் பழகுநர் பயிற்சி வாரியத்தின் தென்மண்டல இயக்குனர் ஏ.அய்யாகண்ணு நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை சார்பில், தொழில் பழகுநர் பயிற்சி திட்டத்தை சென்னை, மும்பை, கான்பூர் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் அமைந்துள்ள தொழில் பழகுநர் பயிற்சி வாரியங்கள் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், அவர்கள் நிரந்தர வேலைவாய்ப்பினை பெற உதவி செய்யப்படுகிறது.

இந்நிலையில், மாணவ, மாணவியர் தொழில் பயிற்சி பெறவும், நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு பயிற்சிக்காக மாணவர்களை தேர்வு செய்வதற்காகவும் வேண்டி புதிதாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் மாணவர்கள் தொழிற்பயிற்சி பெறுவதற்காக தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். அவர்களுக்குதொழிற் பயிற்சி முடித்த உடன் இதே இணையதளம் மூலம் டிஜிட்டல் சான்றிதழையும் பெற்றுக் கொள்ளலாம்.

இதேபோல், தொழில் நிறுவனங்களும் இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு மாணவர்களை தேர்வு செய்யலாம். மேலும், கல்வி நிறுவனங்களும் தங்கள் கல்லூரியில் தொழிற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சி பெற பதிவு செய்து கொள்ளலாம். 

இதன் மூலம், நாடு முழுவதிலும் உள்ள தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெற முடியும்.நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் 1.50 லட்சம் மாணவர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் 30 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களுக்கு உதவித் தொகை அளிப்பதற்காக மத்திய அரசு இந்த ஆண்டு ரூ.60 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.இவ்வாறு அய்யாகண்ணு கூறினார்.

No comments:

Post a Comment