Pages

Tuesday, September 29, 2015

டெங்கு காய்ச்சலாக இருக்க வாய்ப்பு மாணவர்களிடம் காய்ச்சல் இருந்தால் ஆஸ்பத்திரிக்கு தெரியப்படுத்த வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குனரகம் கடிதம்

மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கடுமையான காய்ச்சல் இருந்தால் அது டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் எனவே உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அனைத்து பள்ளிக் கூட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் கடிதம் அனுப்பி உள்ளது.


பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

கொசு உற்பத்தியை தடுக்க பள்ளிக் குழந்தைகள் கீழ்க்காணும் சுகாதாரமான பழக்கங்களைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள் அவ்வப்போது கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்ளுதல் குறிப்பாக உணவு உண்பதற்கு முன்பும் கைகளைக் கழுவுதல்.

*உணவு உண்ணும் தட்டுகள் மற்றும் தண்ணீர் குடிக்கும் டம்ளர் மற்றும் உணவு சமைக்கும் பாத்திரங்கள் அனைத்தும் சுத்தமாகவும் தூய்மையாகவும் இருத்தல் வேண்டும்.

* குடிநீர்ப் பானைகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் மூடி வைக்கப்பட வேண்டும். இதன் மூலம் கொசுக்களின் பெருக்கத்தைத் தடுக்க முடியும்.

*வகுப்பறைகளைச் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருத்தல் வகுப்பறை மற்றும் கழிவறைகளைச் சுற்றித் தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக அதனைத் தலைமையாசிரியருக்கு மாணவர்கள் தெரியப்படுத்துதல்.

*தலைமையாசிரியர் தேங்கிய நீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பற்றிய அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்துதல். அதனை மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களுக்கும் தெரிவித்து இது குறித்த விழிப்புணர்வை தங்கள் குடும்பத்தாருக்கும் ஏற்படுத்த வேண்டும்.

ஆஸ்பத்திரிக்கு செல்ல அறிவுரை
*ஆசிரியர்கள், மாணவ–மாணவிகளிடம் கடுமையான காய்ச்சல், சளி, இருமல் முதலிய அறிகுறிகள் காணப்பட்டால் அதனை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும். அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தவது கட்டாயம். மாணவ–மாணவர்களுக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

*எந்த சூழ்நிலையிலும் சுயமருத்துவம் செய்து கொள்வதை தவிர்த்தல் வேண்டும்.

*மாணவர்கள் தங்கள் வீட்டில் உள்ளோரிடம் கடுமையான காய்ச்சல், சளி, இருமல் முதலிய அறிகுறிகள் காணப்பட்டால் அதனை தலைமையாசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியரிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்துதல்.

காலை நேர வழிபாட்டு நேரத்தில்
*காலை வழிபாடு நேரத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் அனைத்து மாணவர்களும் இது குறித்து சுய உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

*மேலும் கல்வித்துறையை சார்ந்த அனைத்து அலுவலகங்களிலும், அலுவலக வளாகங்களையும் சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ளவும் அதற்குரிய சான்றினை சார்ந்த அலுவலர்கள் வழங்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.  இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment