Pages

Wednesday, September 30, 2015

வட்டி குறைப்பில் ரிசர்வ் வங்கி அதிரடி: வீடு, வாகனக்கடன் சுமை குறையும்

ரிசர்வ் வங்கி நேற்று, குறுகிய காலக்கடனுக்கான வங்கி வட்டி விகிதத்தில், அதிரடியாக, 0.50 சதவீதம் குறைத்துள்ளது. இதனால், வீடு, வாகனங்கள் வாங்குவோருக்கான கடன் சுமை, கணிசமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

சீன பொருளாதாரம் மந்தமடைந்து வருவதால், உலக பொருளாதாரத்தில் தடுமாற்றம் காணப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார தேக்கநிலை நிலவுகிறது. இதனால், இந்திய பொருளாதாரம் பாதிப்படைந்து, சிக்கலை சந்தித்து வருகிறது.இந்திய பொருளாதாரத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில், வங்கி வட்டி விகிதத்தை குறைக்க வேண்டுமென, தொழில் துறையினரும், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி வந்தன. அதற்கு, அதிகமாக அழுத்தம் தரப்பட்டு வந்ததால், குறைந்தபட்சம், 0.25 சதவீதமாவது வட்டி குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் நான்காவது நிதிக் கொள்கையை, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், மும்பை யில் நேற்று வெளியிட்டார். 


அந்த அறிக்கையில், 'ரெபோ' எனப்படும், குறுகிய காலக் கடனுக்கான வங்கி வட்டி விகிதம், அதிரடியாக, 0.50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ரிசர்வ் வங்கியிடமிருந்து, வங்கிகள் பெறும் குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதம், 7.25 சதவீதத்திலிருந்து, 6.75 சதவீதமாகி உள்ளது. கடந்த, நான்கரை ஆண்டுகளில், இது மிகக்குறைவு. அதே சமயம், சி.ஆர்.ஆர்., எனப்படும், ரிசர்வ் வங்கியில், மற்ற வங்கிகள் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதம், மாற்றம் செய்யப்படாமல், 4 சதவீதமாக இருக்கும். நடப்பு நிதியாண்டுக்கான, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு, முன்பு கூறப்பட்ட, 7.6 சதவீதத்துக்கு மாறாக, 7.4 சதவீதமாக இருக்கும். 



எதிர்பார்ப்பு:


நிதிக் கொள்கை அறிக்கையை வெளியிட்ட பிறகு, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், கூறியதாவது:சில்லரை விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம், 5.8 சதவீதத்துக்கு கீழே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தொழில் துறையை ஊக்கப்படுத்தும் வகையில், 0.50 சதவீத வட்டி குறைப்பு நியாயமானதே. அடுத்த கட்டமாக, 2017, மார்ச்சுக்குள், பணவீக்க விகிதத்தை, ஐந்து சதவீதத்துக்கு கீழே கொண்டு வருவதில் கவனம் செலுத்தப்படும். பணவாட்டப் பாதை யில், பொருளாதாரம் பயணிக்க தேவையான மாற்றங்களை, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையில் கவனமாக மேற்கொள்வோம். அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்துவதை தள்ளிப் போட்டுள்ளது. இதனால், கரன்சி வீழ்ச்சி குறித்த, வளரும் நாடுகளின் அச்சம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல், நான்கு முறை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மூலம், மொத்தத்தில், 1.25 சதவீத வட்டி குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜனவரிக்கு பிறகு, வங்கிகள், 0.30 சதவீத அளவில் மட்டுமே, வட்டியை குறைத்து உள்ளன. ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு ஏற்றவாறு, வட்டி குறைப்பின் முழு பயனை, நுகர்வோருக்கு வழங்க வேண்டும். இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார். 



பாரத ஸ்டேட் வங்கி:





ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், ஆந்திரா வங்கி, கடனுக்கான வட்டியை, 0.25 சதவீத அளவுக்கு குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டது; பாரத ஸ்டேட் வங்கி, அக்., 5 முதல், 0.40 சதவீத வட்டியை குறைப்பதாக அறிவித்துள்ளது.வங்கிகளின் வட்டி குறைப்பால், வாகனங்கள், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் கணிசமாக குறையும் என்றும், சம்பந்தப்பட்ட தொழில்கள் புத்துணர்ச்சி பெறும் என்றும், நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். சர்வதேச சந்தைகளை பிரதிபலிக்கும் வகையில், இந்திய பங்குச் சந்தைகள், நேற்று காலை, சரிவு பாதையில் சென்று கொண்டிருந்தன. ஆனால், ரிசர்வ் வங்கி, எதிர்பார்ப்புக்கு அதிகமாக, 0.50 சதவீத வட்டி குறைப்பை அறிவித்ததால், பங்குச் சந்தைகள் சிறப்பான ஏற்றம் கண்டன. மும்பை பங்குச் சந்தை குறியீடு, 'சென்செக்ஸ்' பிற்பகலில், 400 புள்ளி வரை அதிகரித்தது. இருப்பினும், வர்த்தக முடிவில், சற்று இறங்கி, 161 புள்ளிகள் அதிகரித்து காணப்பட்டது.



'சான்டாகிளாஸ் அல்ல நான்':





கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, பரிசுகளை வாரி வழங்கும், சான்டாகிளாஸ் தாத்தா போல, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், வட்டியை குறைத்துள்ளதாக, தொழில் துறையை சேர்ந்த சிலர் கருத்து தெரிவித்தனர். 
இதுகுறித்து, ரகுராம் ராஜன் கூறியதாவது:என் பெயர் ரகுராம் ராஜன். நான், என்ன செய்ய வேண்டுமோ, அதைத்தான் செய்துள்ளேன். என்னை எப்படி அழைக்க வேண்டுமென, நீங்கள் நினைக்கிறீர்கள் எனத் தெரியவில்லை. சான்டாகிளாஸ் என்றோ, கழுகு என்றோ, நீங்கள் அழைக்கலாம். அதுபற்றி எனக்குத் தெரியாது. என் பணியைத்தான் நான் செய்கிறேன். இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார். 



'வட்டியை குறையுங்க':





வங்கிகள், வட்டி விகிதத்தை குறைக்க வேண்டுமென, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வலியுறுத்தி உள்ளார். ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு பின், அருண் ஜெட்லி, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு, பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த, அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு, பெரியஅளவில் உதவியாக இருக்கும். இந்த வட்டி குறைப்புகளை, வங்கிகள், நுகர்வோருக்கு முழுமையாக பரிமாற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம், தொழில் துறையினர் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டு, முதலீடுகள் அதிகரிக்கும்.இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார். 



மத்திய அரசு பரிசீலனை:





வருங்கால வைப்பு நிதி, தபால் அலுவலகத்தில் செய்யப்படும் முதலீடுகள் ஆகியவற்றுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்ய, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதி, தபால் அலுவலக முதலீடுகள் போன்ற சிறு சேமிப்புகளுக்கு, 8.7 முதல், 9.3 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. அவற்றுக்கு இணையாக, வங்கிகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வட்டி வழங்க வேண்டுமென நினைப்பதால், நுகர்வோருக்கு, வட்டி விகிதத்தை குறைப்பதில், வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன.இதைக் கருத்தில் கொண்டு, பி.எப்., போன்றவற்றுக்கான வட்டி விகிதத்தை மறுபரிசீலனை செய்யப் போவதாக, பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்திகந்த தாஸ் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கி, குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதத்தில், 0.50 சதவீதம் குறைப்பது, வரவேற்புக்கு உரியது. இதன் மூலம், குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும் சூழ்நிலை உருவாகும். அரசு, நிதிநிலை சீராக்கல் பாதையில் தொடர்ந்து உறுதியாக இருந்தால், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையில், மேலும் சிறப்பான முடிவுகளை எதிர்பார்க்கலாம். 

ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய நிதியமைச்சர், காங்.,

ரிசர்வ் வங்கி அறிவித்த வட்டி குறைப்பின் முழு பயனை, வீடு வாங்குவோருக்கு, வங்கிகள் அளிக்க வேண்டும். இதையே, ரிசர்வ் வங்கியின் கவர்னர், ஒவ்வொரு முறையும் வலியுறுத்தி வருகிறார். தற்போதுள்ள சூழ்நிலையில், வட்டி குறைப்பை, வங்கிகள் கட்டாயம் அமல்படுத்த வேண்டும். அதனால், நுகர்வோர் பயனடைய வேண்டும். 
கீதாம்பர் ஆனந்த்
'கிரெடாய்' எனப்படும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கான உச்ச அமைப்பின் தேசிய தலைவர்

பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு அமைந்துள்ளது. கடன் வாங்குவோருக்கு, வட்டி குறைப்பின் பயனை, வங்கிகள் அளிக்க வேண்டும். அதன் மூலம், தேவை அதிகரித்து, முதலீடுகள் பெருகும். 

சந்திரஜித் பானர்ஜி
சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பின் பொது இயக்குனர்

பொருளாதார வளர்ச்சிக்கு, வட்டி குறைப்பு, மிகவும் அவசியம். இதன் மூலம், முதலீடு பெருகும் என நினைக்கிறேன். வீடு, வாகனம், நுகர் பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும். பண்டிகைக் காலம் துவங்கியுள்ள நிலையில், வட்டி குறைப்பு அறிவிப்பு சிறப்பானதாக அமைந்துள்ளது. 

ஆதி கோத்ரெஜ்
கோத்ரெஜ் குழும தலைவர்

No comments:

Post a Comment