உலக இன்ஜினியரிங் பல்கலைகள் தரவரிசை பட்டியலில், சென்னை அண்ணா பல்கலைக்கு, 151வது இடம் கிடைத்துள்ளது. 'பிரிக்ஸ்' நாடுகள் பட்டியலில், சென்னை பல்கலை, 78வது இடத்தை பிடித்துள்ளது.
சிறப்பான செயல்பாடு:இங்கிலாந்தைச் சேர்ந்த க்யூ.எஸ்., எனப்படும், 'க்வாக்குவாரெல்லி சைமண்ட்ஸ்' நிறுவனம் சார்பில், இன்ஜி., மற்றும் அறிவியல் பல்கலைகளின் தரவரிசை பட்டியல், ஆண்டுதோறும் வெளியிடப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
இன்ஜி., பல்கலை தரவரிசை பட்டியலில், 800 பல்கலைகள் உள்ளன. அமெரிக்காவின் எம்.ஐ.டி., பல்கலை முதல் இடத்தையும், அடுத்தடுத்த இடங்களை, ஹார்வர்டு மற்றும் கேம்பிரிட்ஜ்
பல்கலைகள் பிடித்துள்ளன. இந்திய உயர்கல்வி நிறுவனங்களில், ஐ.ஐ.டி., பெங்களூரு, 147வது இடத்தை பெற்றுள்ளது. டில்லி - 179, மும்பை - 202, சென்னை ஐ.ஐ.டி., 254வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியாவில் உள்ள, 15 நிறுவனங்களின் பட்டியலில், தமிழகத்தில் உள்ள சென்னை ஐ.ஐ.டி., தான், உலக பல்கலைகளின் ஒட்டுமொத்த சிறப்பான செயல்பாட்டு பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
முக்கிய இடம்:இன்ஜி., துறையில் மெக்கானிக்கல் பாடப்பிரிவில், இந்தியாவில் மொத்தம், ஒன்பது பல்கலைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில், சென்னை அண்ணா பல்கலை, சர்வதேச அளவில், 151வது இடத்தைப் பெற்றுள்ளது. அண்ணா பல்கலைக்கு முந்தைய இடங்களை, மும்பை, டில்லி, சென்னை, காரக்பூர் மற்றும் கான்பூர் ஐ.ஐ.டி.,க்கள் பெற்றுள்ளன. கவுகாத்தி மற்றும் ரூர்க்கி பல்கலைகள், அண்ணா பல்கலைக்கு அடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
சிறந்த ஆசிரியர்களுக்கான பிரிவில், இந்திய ஐ.ஐ.டி., நிறுவனங்களுடன், சென்னை அண்ணா பல்கலை, 293வது இடத்தை பிடித்துள்ளது. மற்ற பாடப்பிரிவுகளில், இந்திய ஐ.ஐ.டி., நிறுவனங்கள் வேதியியல், சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், சுற்றுச்சூழல், கணிதம், இயற்பியல் போன்ற துறைகளில் முக்கிய இடங்களைப் பிடித்துள்ளன.
இந்திய புள்ளியியல் நிறுவனம், புள்ளியியல் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கலை மற்றும்
வடிவமைப்பு பிரிவில், சாஸ்த்ரா பல்கலை, 51வது இடத்தைப் பிடித்து உள்ளது.
இடம் பெறவில்லை:அதேநேரம், 'பிரிக்ஸ்' எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகளுக்கான பட்டியலில், சென்னை பல்கலை, 78வது இடத்தை பிடித்துள்ளது. 151வது இடத்தில் அண்ணா, பாரதிதாசன் மற்றும் வி.ஐ.டி., பல்கலைகள் இடம் பெற்றுள்ளன.ஆங்கிலப் பிரிவில், இந்தியாவில், ஐதராபாத் பல்கலை மட்டுமே இடம் பிடித்துள்ளது. அரசியல் அறிவியல், புவியியல், வரலாறு, சமூகவியல் ஆகியவற்றில், ஜவகர்லால் நேரு மற்றும் டில்லி பல்கலைகள் இடம் பெற்று உள்ளன.
இந்தப்பட்டியலில், 10க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளில், இந்தியாவில் எந்த பல்கலைக்கும் இடம் கிடைக்கவில்லை. கல்வி, மருத்துவம், கால்நடை மருத்துவம், சட்டம், தகவல் தொடர்பு, நிதி, விவசாயம், உயிரியல், பல் மருத்துவம், வணிகவியல், தத்துவவியல் மற்றும் மனோதத்துவவியல் ஆகிய பிரிவுகளில், எந்த பல்கலையும் மற்றும் கல்வி நிறுவனங்களும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment