Pages

Thursday, September 24, 2015

அரசு ஊழியர்களுககு திமுக பாதுகாப்பு அரணாக திகழும்: மு.க. ஸ்டாலின் பேச்சு

ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பு அரணாக திமுக திகழும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.



நமக்கு நாமே சுற்றுப்பயணத்தை மு.க. ஸ்டாலின் பணகுடியில் தொடங்கினார். தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் 8 பேரவைத் தொகுதியில் பொதுமக்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மகளிர் குழுவினர் என அனைத்து தரப்பினரையும் சந்தித்தார்.

பின்னர் இரவு 10.05 மணிக்கு திருநெல்வேலி நகரம் வந்தார். நெல்லையப்பர் கோயில் அருகில் உள்ள இருட்டுக்கடை அல்வா விற்பனை கடைக்கு வந்த ஸ்டாலினை கடையின் உரிமையாளர் ஹரிசிங் வரவேற்றார். அல்வா சாப்பிட்ட ஸ்டாலின், வேனில் இருந்தவாறு வியாபாரிகள், பொதுமக்களை சந்தித்தார்.

அங்குள்ள விஜயசரஸ்வதி அம்பாள் கோயில் குருக்கள் அளித்த பூரண கும்ப மரியாதையை ஏற்றுக் கொண்டார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. கோதர்மைதீன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பாளையங்கோட்டையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், போக்குவரத்துக் கழக சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.

தாமதமாக வந்ததற்காக அவர்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கோரினார். தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகள் பேசினர். அவர்கள் கூறியதாவது: பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மேல்நிலை கல்விக்கு தனி இயக்குநரகம், முதுகலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வேண்டும்.

கிராம செவிலியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு அளிக்க வேண்டும். தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

6 ஆவது ஊதிய குழுவில் காணப்படும் முரண்பாடுகளை களைய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. 2004 க்கு பிறகு பணியில் இருந்து இறந்த 2432 ஆசிரியர்களுக்கு இன்னமும் பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்கவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர் பணியிட மாற்றத்துக்கு பல லட்சம் வசூல் செய்யும் நிலை உள்ளது. கல்வித் துறையில் வெளிப்படையான நிர்வாகம் இல்லை.

அரசுத்துறையில் கணினி பணியிடம் உருவாக்கி அப்பணியில் உள்ளவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மிக குறைந்த ஊதியம் பெற்று வரும் கிராம துப்புரவு பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் பணி செய்யும் 30 லட்சம் பணியாளர்களின் வாழ்க்கை மேம்படும் வகையில் ஊதியம் வழங்க வேண்டும்.

சிறுசேமிப்பு முகவர்களுக்கு வழங்கப்பட்ட 2 சதவீத ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வழங்கிட வேண்டும்.

அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் பணப்பலன் எதுவும் இல்லாமல் பணி செய்து வருகின்றனர். போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்காமல், போக்குவரத்துத் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டும்.

முடிவில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: முதல்வர், அமைச்சர்கள் மக்கள் நலத் திட்டங்களை அறிவித்தாலும் செயல்படுத்த உத்தரவிட்டாலும், அதனை திறம்பட மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய சிறப்பான பணியினை செய்பவர்கள் அரசு ஊழியர்கள்தான்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அவர்கள் கவலை அடையும் வகையில் அரசு செயல்படக் கூடாது. திமுக ஆட்சி காலங்களில் பல்வேறு திட்டங்களை அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே சிறப்பாக நிறைவேற்றினார். அரசின் சாதனை அரசு ஊழியர்களின் பணியால்தான் கிடைக்கிறது.

அந்த வகையில் திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்கிறது. தொடர்ந்து பாதுகாப்பு அரணாக திகழும்.

அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் தற்கொலை செய்யும் நிலை உள்ளது. பெண் டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறை அதிகாரிக்கு அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை.

கடந்த 2 நாள் சுற்றுப்பயணத்தி்ல் பல்வேறு தரப்பினரை சந்தித்தேன். 2016 இல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அனைத்து தரப்பு மக்களும் தயாராகி விட்டனர் என்பதை உணர முடிந்தது என்றார் அவர்.

காலை 8 மணிக்கு பணகுடியில் சுற்றுப்பயணத்தை தொடங்கிய ஸ்டாலின் இரவு 11.35 மணிக்கு பாளையங்கோட்டையில் நிறைவு செய்தார். அவருடன் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலர் ஐ. பெரியசாமி எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, மாநில இளைஞரணி துணைப்பொதுச்செயலர் அன்பில் மகேஷ் மற்றும்

மத்திய மாவட்ட செயலர் மு. அப்துல்வஹாப், மாநகர செயலர் லட்சுமணன், டி.பி.எம். மைதீன்கான் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் பூங்கோதை, கிழக்கு மாவட்டச் செயலர் இரா. ஆவுடையப்பன், மாநில தணிக்கைக்குழு உறுப்பினர் சுப. சீதாராமன், மத்திய மாவட்ட இளைஞரணி செயலர் வின்சர், மாணவரணி செயலர் ஆறுமுகம், தொண்டரணி செயலர் செல்வம் என்ற கருப்பசாமி, விவசாய அணி செயலர் பொன்னயாபாண்டியன், மாவட்ட துணைச் செயலர் ஆ.க. மணி, எஸ்.பி. கண்ணன், பகுதி துணைச் செயலர் ரவீந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment