ஆசிரியர்களின்றி சுயமாக கல்வி கற்கும் வகையிலான புதிய இணையதள சேவை நவம்பரிலிருந்து செயல்படத் தொடங்கும் என யுஜிசி துணைத் தலைவர் தேவராஜ் தெரிவித்தார்.
உதகை அருகே உள்ள கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டின் கல்வி வளர்ச்சியில் பிரதமர் மோடி அதிக அக்கறை காட்டி வருகிறார். நாட்டில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஏற்ற வேலை வாய்ப்பில்லை. நடப்பாண்டில் தமிழகத்தில் மட்டும் பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் காலியாகவுள்ளன. இவற்றை மறு சீரமைக்கும் முயற்சியாகவே மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா ஆகிய 3 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றோடு சுயம் போர்ட்டல் என்ற புதிய இனையதள சேவை தொடங்கப்படவுள்ளது. தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்படும். அதை வைத்துக் கொண்டே தேர்வுக்கு தயாராகலாம். செய்முறைத் தேர்வுகளுக்கு குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில், இத்திட்டத்தை பல்கலைக்கழக மானியக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள 7 மையங்களிலும், சென்னை பல்கலைக்கழகம், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் மூலமாகவும் செயல்படுத்த தீர்மானிக்கப்ட்டுள்ளது.
ஆசிரியர்களின் கல்வித்தரம் பல்வேறு இடங்களிலும் கவலைக்குரியதாக உள்ளது. சிறந்த ஆசிரியர்கள் இருந்தால்தான் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும். இதற்காகவே இந்தியாவிற்கு தேவைப்படும் பிரத்யேகமான பாடங்களுக்கான ஆசிரியர்களை வெளிநாடுகளிலிருந்து வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கியான் என அழைக்கப்படும் இத்திட்டத்தில் சோதனை முயற்சியாக ஐஐடி, எம்ஐடி கல்வி மைங்களில் வெளிநாட்டு ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
அதேபோல, கல்வி வளர்ச்சியில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக காக்கிநாடா, வாரணாசியில் தலா ரூ. 300 கோடியில் பயிற்சி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். நாட்டில் கல்வி வளர்ச்சியில் 42 சதவீதத்துடன் தமிழகமே முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் கல்வி வளர்ச்சி விகிதம் 22 சதவீதமாகும். வளர்ந்த நாடுகளில் 30 சதவீத கல்வி வளர்ச்சியே அதிகபட்சம் என்பதால் 2020-இல் இந்தியா கல்வி வளர்ச்சி பெற்ற முக்கிய நாடாக மாறும். கல்லூரி ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலமாக ஊதியம் வழங்குவது தொடர்பாக நிதித் துறையுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சிஎஸ்ஐ கல்வி நிறுவனங்களின் தலைவர் பிஷப் திமோத்தி ரவீந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment