கல்வியியல் கல்லூரிகள் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்படும் - தமிழக முதல்வர் ஜெயலலிதா
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாசித்த உரையில்,
1. கடந்த நான்கு ஆண்டுகளில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 11 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் மற்றும் 14 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த நான்காண்டுகளில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 959 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும், தரமான கல்வியை வழங்கும் நோக்கிலும், மேற்குறிப்பிட்ட தேவைகளுக்கு ஒப்பளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டும், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 611 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் 533 விரிவுரையாளர் பணியிடங்கள், என மொத்தம் 1,144 உதவிப் பேராசிரியர் / விரிவுரையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
2. அண்ணா பல்கலைக்கழகம் தற்போது பல்கலைக்கழக துறைகளை உள்ளடக்கிய 4 வளாகங்களையும், 13 உறுப்புக் கல்லூரிகளையும் மற்றும் 4 மண்டல அலுவலகங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த துறைகள் மிகச் சிறப்பு வாய்ந்த வளர்ச்சி நிலைக்கு உயர்த்தப்படும். மேலும், விடுதிகள், போக்குவரத்து வசதிகள், மைய நூலகங்கள், கணினி மையங்கள், சூரிய ஒளியில் இருந்து ஆற்றல் உருவாக்கும் அமைப்புகள், ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
3. இயற்கை பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் சிறப்புற மேற்கொள்ள ஆளில்லா வான்வெளி வாகனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாகனம் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்து மதிப்பு மிகுந்த தகவல்களை தர வல்லது. இவ்வாகனத்தின் திறன்களை பயன்படுத்தி அனுபவம் வாய்ந்த நிவாரண பணியாளர்கள் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள இயலும்.
அதே போல் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அபாயங்கள்,ஆகியவற்றை கண்காணிப்பதற்கும் இது பயனுள்ளதாக அமையும். எனவே, ஆளில்லா வான்வெளி வாகனம் மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் வகையில் அண்ணா பல்கலைக் கழகம் மூலம் ஆளில்லா வான்வெளி வாகனம் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்படும். இத்திட்டத்திற்கென அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 20 கோடி ரூபாய் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
4. பல்கலைக்கழகங்கள் சிறப்பாக செயல்பட தரமான உட்கட்டமைப்பு வசதிகள் இருத்தல் வேண்டும். எனவே, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
5. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேலும் மேம்படுத்தப்படும் வகையில், 62 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
6. கடந்த 4 ஆண்டுகளில் 11 அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள கிராமப்புற மாணவர்கள் மற்றும் மாணவிகள் தொழில்நுட்பக் கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இக்கல்லூரிகளுக்குத் தேவையான ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்கள், நிரப்பப்பட்டு வருகின்றன. மேலும், கணினிகள், அறை கலன்கள், நூல்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகள் இல்லாத இடங்களில், இத்தகைய கல்லூரிகளைத் துவங்குவதன் மூலம் மாணவர்கள் மற்றும் மாணவிகள் நீண்ட தூரம் பயணம் செய்து கல்வி பயிலும் நிலை தவிர்க்கப்பட்டு, அவர்கள் தொழில்நுட்பக் கல்வி பெற இயலும். பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் தொழில்நுட்பக் கல்வி பெற்று வேலைவாய்ப்பு பெற இது வழி வகுக்கும். எனவே, 5 புதிய அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகள் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
7. தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 1957க்கு பிறகு கல்வியல் கல்லூரிகள் துவக்கப்படவில்லை. தற்போது 5 கல்வியியல் கல்லூரிகள் துவங்கப்படும் என தெரிவித்தார்
No comments:
Post a Comment