வாடிக்கையாளர்களின் பிரச்னைகளுக்கு வங்கிகள் சுமுகத் தீர்வு காண வலியுறுத்தல்
வங்கிச் சேவை குறித்து வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு சுமூகத் தீர்வு காண தொடர்புடைய வங்கிகள் முயற்சிக்க வேண்டும் என்று சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் குறைதீர் ஆணையத்தின் பொது மேலாளர் செல்வராஜ் ராஜா வலியுறுத்தினார்.
இந்திய ரிசர்வ் வங்கி குறைதீர் ஆணையத்தின் ஆண்டறிக்கையை வங்கியின் பொது மேலாளர் செல்வராஜ் ராஜா சென்னையில் புதன்கிழமை வெளியிட்டு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 2014-2015 (ஜூன் 30 வரை) ஆண்டில் வங்கிகள் மீது வாடிக்கையாளர்கள் அளித்த 8,285 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கி, அது சார்ந்த வங்கிகள் மீது 27 சதவீதமும், தேசிய மயமாக்கப்பட்ட இதர வங்கிகள் மீது 37 சதவீதமும், தனியார் வங்கிகள் மீது 19 சதவீதமும், வெளிநாட்டு வங்கிகள் மீது 5 சதவீதமும் புகார்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்டன. குறிப்பாக நாட்டிலேயே பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் மீது 22 சதவீத பேர் புகார் அளித்திருந்தனர்.
அதிகபட்சமாக ஏ.டி.எம்., கடன் அட்டைகள் தொடர்பாக 48 சதவீதம் பேர் புகார் அளித்திருந்தனர். முன் பணம் தொடர்பாக 1,327 புகார்கள் பெறப்பட்டன. அதில், 82 சதவீதம் கல்விக் கடன் தொடர்பானப் புகார்களாக இருந்தன.
இந்திய ரிசர்வ் வங்கியின் குறைதீர் ஆணையத்துக்கு வாடிக்கையாளர்கள் அனுப்பும் புகார்கள் முறையாக ஆய்வு செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து, புகார் பெறப்பட்ட நாளில் இருந்து 3 நாள்களுக்குள் தொடர்புடைய வங்கிகளுக்கு விளக்கம் கேட்டும், நடவடிக்கை எடுக்கக் கோரியும் அறிவுறுத்துகிறோம். இந்திய ரிசர்வ் வங்கி குறைதீர் ஆணையம் குறித்து பொதுமக்கள் முழுமையான விழிப்புணர்வு பெறுவது அவசியம்.
எவ்வாறு புகார் செய்வது? ஒரு வாடிக்கையாளருக்கு அவர் சார்ந்துள்ள வங்கியில் கடன், ஏ.டி.எம்., கிரடிட் அட்டைகள், ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றைப் பெறுதல், இணைய சேவை போன்றவற்றில் ஏதாவது பிரச்னைகள் இருந்தால் முதலில் அந்த வங்கியில் தனது புகார் குறித்து தெரிவித்து, அதற்குரிய ஒப்புகைச் சீட்டைக் கேட்டுப் பெற வேண்டும்.
இதைத் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு மாத காலத்துக்குள் எந்த நடவடிக்கையும் இல்லாவிட்டால் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டை புகாருடன் இணைத்து சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் குறைதீர் ஆணையத்துக்கு அனுப்பலாம். புகார்களை மின் அஞ்சலிலும் அனுப்பலாம். அதன் அடிப்படையில், குறைதீர் ஆணையம் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்.
வாடிக்கையாளர்களின் பிரச்னைகள், புகார்களுக்கு சுமுகமாகத் தீர்வு காண வங்கிகள் முயற்சிக்க வேண்டும். ஏனெனில், காசோலை புத்தகம் தரவில்லை போன்ற சிறிய அளவிலான புகார்களைக்கூட வாடிக்கையாளர்கள் எங்களுக்கு அனுப்புகின்றனர்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடனை அவர்கள் படிக்கும்போதே செலுத்தத் தொடங்க வேண்டும் என சில வங்கிகள் நிர்பந்திப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, சட்டரீதியாக இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றார் அவர்.
No comments:
Post a Comment