Pages

Sunday, September 20, 2015

தலைமை ஆசிரியர்- ஊராட்சித் தலைவர் மோதல்: விலையில்லாப் பொருள்கள் வழங்கும் விழா ரத்து

வாணியம்பாடி அருகே தலைமை ஆசிரியருக்கும், ஊராட்சி மன்றத் தலைவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, மாணவர்களுக்கு விலையில்லாப் பொருள்கள் வழங்கும் அரசு விழா ரத்து செய்யப்பட்டது.



நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்கு உள்பட்ட ராமநாயக்கன்பேட்டை ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக சம்பூர்ணசகாயம் இருந்து வருகிறார். இப்பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் சங்கத் தலைவராக ராமநாயக்கன்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.ஆர்.வாசு, கல்விக் குழுத் தலைவராக சம்பத்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளனர்.

இப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற இருந்தது.

இதில், அமைச்சர் வீரமணி, எம்எல்ஏ சம்பத்குமார், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விலையில்லா பொருள்களை வழங்க உள்ளதாக நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

விழா ஏற்பாடுகள் குறித்து பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் சம்பூர்ணசகாயத்துக்கும், ஊராட்சி மன்றத் தலைவர் வாசு, சம்பத்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஊராட்சி மன்றத் தலைவர் வாசுவுக்கு ஆதரவாக தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அவர்களிடம்  டிஎஸ்பி  வனிதா, வட்டாட்சியர் செந்தில் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகும்படி செய்தனர். இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் வாசு, தலைமை ஆசிரியர் சம்பூர்ணசகாயம் ஆகியோர் அம்பலூர் காவல் நிலையத்தில் தனித் தனியாக புகார்கள் அளித்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால், சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லாப் பொருள்கள் வழங்கும் விழா மறு தேதி குறிப்பிடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

No comments:

Post a Comment