Pages

Sunday, September 20, 2015

பாடம் நடத்த ஆசிரியருக்கு என்ன மனநிலை வேண்டும்?

வகுப்பில் நுழைந்தவுடன் ஆசிரியர்கள் புன்னகையுடன் மாணவர்களைப் பார்த்து, தங்களுக்குள் ஒரு சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும்:

‘என் முன்னே உள்ள இவர்கள் யார்? நான் இங்கே செய்ய வேண்டியது என்ன?’


அவ்வாறு கேட்டுக் கொண்டால் அவர்களுக்குள்ளிருந்து ஒரு பதில் கிடைக்கும்:
‘சமுதாயத்தின் பல நிலைகளிலிருந்து வந்துள்ள இந்த மாணவர்கள் பல நூற்றாண்டுகளாக அறிவைத் தேடிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. பல நூற்றாண்டுகளாகக் குறிப்பிட்ட ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்த கல்வியை நாடி இவர்கள் வெகு தூரத்திலிருந்து வந்துள்ளார்கள். நான் இங்கே இவர்களுக்குச் சிறந்த அறிவையும் ஊக்கத்தையும் அளிப்பதற்காக உள்ளேன்.’

ஆசிரியர்களே! இந்த மனப்பான்மையுடன் நீங்கள் கற்றுத் தரும்போது உங்களது ஒவ்வொரு வார்த்தையும் மாணவர்களை ஊக்குவித்துச் சிறப்பாகச் செயலாற்றத் தூண்டும். அப்போது நீங்கள் சம்பளம் வாங்கும் வெறும் தொழிலாளியாக, தனிமனிதனாக இல்லாமல் உண்மையில் சிறந்த ஆசிரியராக – சிறந்த குடிமகனாக – முழு மனிதனாக உயர்வீர்கள்.

தனிமனிதன்- முழுமனிதன்
நீங்கள் வளர்ச்சியடைய இரண்டு அம்சங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அவை: தனிமனிதன், முழுமனிதன்.
தனிமனிதனாக நீங்கள், ஆசைகள், விருப்பு‚வெறுப்புகள், லட்சியங்கள் மற்றும் பரம்பரைப் பண்புகள் ஆகியவற்றின் வரையறைக்கு உட்பட்டவர்களாக உள்ளீர்கள்.
ஆனால் முழுமனிதனாக உயர்ந்தவுடன் பரந்து, விரிந்து பிறரது வாழ்க்கையிலும் நுழைந்து, இயைந்து வாழ ஆரம்பிக்கிறீர்கள். இது தனிமனிதனுக்கும் முழுமனிதனுக்கும் உள்ள வேறுபாடு. முழுமனிதன் என்ற வார்த்தை தனிமனிதன் அல்லது தனித்துவம் என்பதைவிட அதிக பொருள் பொதிந்தது.


மனிதநல ஆர்வலரான ஆங்கில அறிஞர் பெர்ட்ரன்ட் ரஸல் கூறுவார்: ‘தனிமனிதர்கள் பில்லியர்டு பந்துகளைப் போன்றவர்கள். தனிமனிதன் பிறருடன் இயைந்து வாழ முடியாமல் அவர்களுடன் அடிக்கடி மோதிக் கொள்கிறான்’.

தனிமனித நிலையில் ஆசிரியர்கள் பிற ஆசிரியர்களுடனும், மாணவர்களுடனும் மோதிக் கொள்கின்றனர். ஆனால் முழுமனிதனாக மாறியதும் நாம் மற்றவர்களின் உள்ளங்களில் நுழையும் திறமையைப் பெற்றுவிடுகிறோம். அவர்களும் நம் உள்ளங்களில் இடம் பிடிக்கின்றனர். அப்போது பிற ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் இணைந்து ஒரே குழுவாக வாழும் பெரும் திறமையைப் பெறுகிறோம்.
இப்படி தனிமனிதனிலிருந்து முழுமனிதனாக மாறும்போது நாம் சக்தி மிக்கவர்கள் ஆவோம். இது ஓர் ஆன்மிக வளர்ச்சி.

தனிமனிதனாக நீங்கள் புலன்களால் கட்டுப்படுத்தப்பட்டவர்கள். ஆனால் சமுதாயத்தில் உணர்வுபூர்வமாகப் பங்கெடுக்கும்போது அந்தக் கட்டுப்பாட்டைக் கடந்து விடுகிறீர்கள்.

அப்போது நீங்கள் முழு மனிதன் ஆகிறீர்கள். அன்பு செலுத்தவும், அன்பைப் பெறவும் உரிய ஆற்றல் உங்களுக்குள்ளே தோன்றிவிடுகிறது. தனிமனிதத் தன்மை என்பது புலன்களால் கட்டுப்படுத்தப்பட்ட அகங்காரம். அக்கட்டுப்பாட்டை அகங்காரம் கடக்கும்போது முழுமனிதத் தன்மையாக உருவெடுக்கிறது.
ஸ்ரீராமகிருஷ்ணர் இதனைப் ‘பக்குவப்படாத அகங்காரம்’ மற்றும் ‘பக்குவப்பட்ட அகங்காரம்’ என்பார்.

வேதாந்தத்தின்படி, தனித்துவமானது ஆன்மிகத்தின் முதல் படி. அது சமுதாயத்தில் அடக்கி ஆளப்பட்ட மனிதனைத் தனித்தன்மை உடையவனாக, சுதந்திரமும் மேன்மையும் மிக்கவனாகச் செய்கிறது. இது இயல்பான ஒன்று.

எந்த விலங்கும் இத்தகைய தனித்தன்மையைப் பெறுவதில்லை. ஏனெனில் அவற்றுக்கு அகங்காரமோ, தான் என்ற உணர்வோ இருப்பதில்லை. இந்தத் தனிமனித உணர்வு என்பது குழந்தைகளிடம் இரண்டு அல்லது இரண்டரை வயதில் அகங்கார உணர்வாக எழ ஆரம்பிக்கும்போது தோன்றுகிறது.
ஐந்து வயது வரை இந்த அகங்கார உணர்வை அல்லது தனித்துவத்தை மேலும் பலப்படுத்துவதையே குழந்தை கற்றுக் கொள்கிறது. அதன் பின் பிறருக்கு உதவுவதன் மூலமும் தன் வாழ்க்கை ஓட்டத்தில் பிறருக்கு உரிய இடத்தை அளிப்பதன் மூலமும் முழு மனிதனாக மாற அந்தக் குழந்தைக்குப் பயிற்சி தரப்பட வேண்டும்.

இல்லையேல் அந்தக் குழந்தை பிறருடன் இனிமையாக இயைந்து வாழ முடியாமல் பிரச்னைகளும் சிக்கல்களும் மிக்க தனிமனிதனாக வளர்ந்துவிடும்.

சம்ஸ்கிருதத்தில் தனித்துவம் என்பது ‘வ்யக்தித்வம்’என்றும், முழு மனிதத்தன்மை என்பது ‘விகஸித வ்யக்தித்வம்’ என்றும் கூறப்படும்.
குழந்தையானது முதலில் வ்யக்தி, பின்பு அதுவே விகஸித வ்யக்தியாக மாற வேண்டும். சமுதாய வாழ்க்கையைப் பார்க்கும்போது நாம் காண்பது இதுவே.

சரியாக வளராத, ஆனால் உரிமைகளைக் கொண்ட, பின்தங்கிய சமுதாயத்திலிருந்து வரும் பிள்ளைகள் பொதுவாக இத்தனித்துவத்தைக் கொண்டிருப்பதில்லை. அந்தக் குழந்தை ஜாதி, பிரிவு என்றவாறு ஏதாவது ஒரு சமூகத்தின் அங்கமாக மட்டும் இருந்திருக்கும்.

ஆனால் சில வாரங்கள் கல்வி கற்க ஆரம்பித்ததும் அதனிடம் ஒரு தனித்துவ உணர்வு வளரும். கல்வியின் முதல்படி இத்தகைய தனித்துவத் தன்மையின் பெருமையையும் மதிப்பையும் மாணவர்களை உணரச் செய்வதே ஆகும் என வேதாந்தம் கூறும்.

இந்தப் பெரும் காரியத்தை நாடு தழுவிய அளவில் செய்ய வேண்டியதே நம் முதல் கடமை. பல நூற்றாண்டுகளாக லட்சக்கணக்கான நம் மக்கள் தங்கள் தனித்துவத்தை மறந்து சமுதாயத்தின் ஓர் அங்கமாக மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். கல்வியின் மூலம் இப்போது தங்களுடைய தனித்துவத்தை உணர்கிறார்கள்.

வேதாந்தத்தின்படி, கல்வியின் மூலம் தனித்துவத்தன்மையை வளர்ப்பதை ஆன்மிக வளர்ச்சி என்கிறோம். இந்த முதல்படியின்றி, அதன் அடுத்தபடியான முழுமனிதத் தன்மையை வளர்ப்பது தீங்கு விளைவிக்கும்.
ஆனால் அதே சமயம் முதல் படியை அதாவது தனித்துவத் தன்மையை மட்டும் வளர்த்தால் சுயநலமுள்ள, கடினமான, பிறருடன் இயைந்து வேலை செய்ய முடியாத தனிமனிதர்களையே உருவாக்குவோம்.

இதுதான் இந்தியாவில் இப்போது நடந்து வருகிறது. நாம் எல்லோரும் தனித்துவம் வாய்ந்தவர்கள், சுதந்திர உரிமை பெற்றவர்கள். இந்த உரிமையை நாம் கேட்டு வாங்கிக் கொள்கிறோம். நமக்குத் தனித்துவம் வாய்ந்தவர்களாகும் சுதந்திரம் உள்ளது.

ஆனால் நம்மிடம் சமுதாயப் பொறுப்புணர்வு இல்லை. இதுவே உள்ளத்தில் வளர்ச்சி பெறாத சுதந்திரத்தின் அறிகுறி. எந்த ஒரு சமுதாயத்திலும் தனித்துவம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் போனால் அது நாட்டின் நலத்திற்கு ஆபத்தாக முடியும்.
எனவே தனிமனிதனை முழுமனிதனாக்கக்கூடியதைக் கல்வியில் மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் தனிமனித சுதந்திரம் உள்ளத்தின் வளர்ச்சியோடு சமுதாயப் பொறுப்புணர்வையும் பெற்றுவிடும்.
இரண்டாவது படியாவது, ஆன்மிக முன்னேற்றத்தால் நடைபெறும் ஓர் உயர்ந்த மாற்றம்.

அதன்பின் நாடு லட்சக்கணக்கான, சுதந்திரமான, பொறுப்புணர்வு கொண்ட, படித்த, அறிஞர்களான குடிமக்களைப் பெற்றுவிடும். அப்போது நாடு தனது லட்சியத்தை நோக்கி வீறுநடைபோடும். இந்த லட்சிய வீறுநடையானது ஒருங்கிணைந்து ஒரே குழுவாக வேலை செய்வதால்தான் முடிகிறது.
தனிமனிதன் இந்த ஆற்றலைக் கொண்டிருப்பதில்லை. அவன் முழு மனிதனாகும்போது அந்த ஆற்றல் தோன்றுகிறது. தனிமனிதனால் பொறாமையின்றி மற்றவர்களுடன் சண்டையிடாமல் இருக்க முடிவதில்லை. ஆனால் முழு மனிதன் பிறருடன் ஒருங்கிணைந்து குழுவாக வாழும் ஆற்றலைப் பெறுகிறான்.

நாம் மனிதர்களை ஒன்றிணைக்கலாம்; ஆனால் தனித்துவம் உள்ளவர்களை ஒன்றிணைப்பது இயலாத காரியம். ஏனெனில் முழு மனிதர்களிடம் அந்த இணைப்பு அவர்கள் உள்ளத்திலிருந்து தோன்றுகிறது. ஆனால் தனித்துவம் மிக்கவர்களிடம் இந்த ஒருங்கிணைப்பு வெளியிலிருந்து நிர்ப்பந்திக்கப்படுகிறது.

இன்றைய சூழ்நிலையில் நம்மிடம் ஒற்றுமை உணர்வோ, ஒன்றாகப் பணி புரியும் திறனோ இல்லை. ஏனெனில் நாம் பொதுவாக முழு மனிதர்களாக இல்லாமல் தனித்துவம் வாய்ந்தவர்களாகவே இருக்கிறோம்.
இந்த நிலை மாறவும், மாற்றிக் கொள்ளவும் முயன்று நாம் சிறந்த ஆசிரியர்களாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

No comments:

Post a Comment