தூய்மை இந்தியா திட்டத்திற்காக உயர்த்தப்பட்ட சேவை வரி நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால், ரெயில்களில் ஏ.சி. மற்றும் முதல் வகுப்பு பயணக் கட்டணம் நாளை முதல் அதிகரிக்கிறது.
இதுதொடர்பாக, ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கூடுதல் சேவை வரி விதிப்பால் ஏ.சி. மற்றும் முதல் வகுப்பு ரெயில் பயணக் கட்டணம் நாளை முதல் 4.35 சதவிகிதம் உயரும் எனக் கூறப்பட்டுள்ளது.
சேவை வரி உயர்வின் மூலம் புதிய கட்டண விகிதத்தின்படி மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் டெல்லியில் இருந்து மும்பை வரையிலான ஏசி முதல் வகுப்பு கட்டணத்தில் ரூ.206 கூடுதல் வசூலிக்கப்படும். அதேபோல் டெல்லி- ஹவுராவுக்கு ஏசி 3 அடுக்கு படுக்கை வசதிக்கான கட்டணம் ரூ.102 கூடுதலாக வசூலிக்கப்படும். சென்னை- டெல்லி இடையிலான ஏசி இரண்டு அடுக்கு படுக்கை வசதி கட்டணத்தில் ரூ.140 கூடுதலாக வசூலிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
ஆண்டுதோறும் பயணிகள் ரெயில் கட்டணம் மூலமாக ரெயில்வேக்கு ரூ.35 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. தற்போது தூய்மை இந்தியா திட்டத்துக்கான சேவை வரி உயர்வின் மூலம் கூடுதலாக ரூ.1000 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேவை வரி 14 சதவீதத்துடன் தூய்மை இந்தியா திட்டத்துக்கான வரியாக அரை சதவீதம் விதிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த 6-ம்தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment