Pages

Saturday, November 21, 2015

மழைக்கால நோய்கள்: ஒரு பார்வை


மழை நின்றாலும் நோய் தொடரலாம். தடுப்பு நடவடிக்கைகள் அவசியம்

தமிழகத்தை,குறிப்பாக சென்னையைப் புரட்டிப் போட்டுவிட்டது மழை. உயிரிழப்புகள், பொருள் சேதங்கள் என்று பல பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. மழை நின்ற பின்னரும் சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் அமிழ்ந்துகிடக்கும் பல பொருட்கள் அரிப்புக்குள்ளாகி வீணாகிவிடும். பாதிப்புகள் அத்துடன் நின்றுவிடப்போவதில்லை. மழைக் கால நோய்களின் படையெடுப்பு தொடங்கும். அவற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வது இன்றைய அவசியத் தேவை.


வைரஸ் காய்ச்சல்

‘ஃபுளு’ எனப்படும் வைரஸ் காய்ச்சல்தான் மழைக் காலத்தில் ஏற்படுகிற பிரதான நோய். காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கைகால்வலி கடுமையாக இருக்கும். தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, இருமல் தொல்லை கொடுக்கும். இந்த வைரஸ் காய்ச்சலுக்கு எந்த ஒரு சிறப்புச் சிகிச்சையும் இல்லை. காய்ச்சலைக் குறைக்க 'பாரசிட்டமால்' மாத்திரை உதவும். தும்மல், மூக்கு ஒழுகுதல் தொல்லைகளைக் கட்டுப்படுத்த 'ஹிஸ்டமின் எதிர்ப்பு மருந்துகள்' பலனளிக்கும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி சரியாக இருந்தால், ஒரு வாரத்தில் இது தானாகவே சரியாகிவிடும். அடுத்தவர்களுக்கு இது பரவாமலிருக்கச் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் வந்தால், நல்ல காற்றோட்டமான அறையில் படுக்க வைக்க வேண்டும். பள்ளிக்கு அனுப்பாமல் தேவையான அளவுக்கு ஓய்வு எடுக்கச் சொல்ல வேண்டும். திரவ உணவுகளை அடிக்கடி தர வேண்டும். காய்ச்சல் அதிகமாக இருந்தால் சாதாரணத் தண்ணீரில் சுத்தமான துண்டை நனைத்துப் பிழிந்து குழந்தையின் உடல் முழுவதும் விரிக்க வேண்டும். இக்காய்ச்சலைத் தடுக்கத் தடுப்பூசி உள்ளது. நான்கு வார இடைவெளியில் இரண்டு ஊசிகள் போட்டுக்கொள்ள வேண்டும். பெரியவர்கள் ஒருமுறை போட்டுக்கொண்டால் போதும்.

வயிற்றுப்போக்கும் காலராவும்

பாக்டீரியா/வைரஸ் கிருமிகள் மாசடைந்த குடிநீர் மற்றும் உணவு மூலம் நமக்குப் பரவுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு, காலரா ஏற்படுகின்றன. ஈக்களும் எறும்புகளும் இக்கிருமிகளைப் பரப்புகின்றன. வழக்கத்தில் இந்த நோயாளிகள் அதிகளவில் நீரிழப்பு ஏற்பட்டு மயக்கம், மரணம் என ஆபத்தை நெருங்குவார்கள். எனவே, இவர்கள் சுத்தமான குடிநீர்/ உப்புக் கரைசல் நீர்/ 'எலெக்ட்ரால்' நீரை அடிக்கடி குடிக்க வேண்டும் அல்லது சலைன் ஏற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நீரிழப்பு சரியாகும்.

இந்த நோய்களைத் தடுக்க, கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். தண்ணீரைக் குறைந்தது பத்து நிமிடம் கொதிக்க வைத்து, ஆறவைத்துக் குடிப்பது நல்லது. குடிநீர் பாத்திரங்களையும், சமைத்த உணவுகளையும் ஈக்கள் மொய்க்காமல் மூடிப் பாதுகாக்க வேண்டும். வெளியிடங்களிலும் சாலையோர உணவகங்களிலும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படுகிற ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கைத் தடுக்கத் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தேங்கிக் கிடக்கும் நீரில் குழந்தைகளை விளையாடவிட வேண்டாம்.

சீதபேதி

அமீபா, சிகெல்லா, ஜியார்டியா போன்ற கிருமிகள் சீதபேதிக்குக் காரணம். தெருக்கள், குளக்கரை மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் மலம் கழிக்கும்போது, மலத்தில் வெளியாகும் இக்கிருமிகளின் முட்டைகள், மழைக் காலத்தில் சாக்கடைநீர் மற்றும் குடிநீரில் கலந்து நம்மைத் தொற்றிவிடும். இவை நம் குடலை அடைந்ததும் கிருமியாக வளரும். அப்போது சீதபேதி ஏற்படும். காய்ச்சல், அடிவயிற்றுவலி, மலத்தில் சீதமும் ரத்தமும் கலந்துபோவது போன்ற அறிகுறிகள் உண்டாகும். சீதபேதியைத் தடுக்க சுயத் தூய்மை, சுற்றுப்புறத் தூய்மை, குடிநீர்த் தூய்மை, உணவுத் தூய்மை ஆகியவை மிக அவசியம். முக்கியமாக, தெருக்களில் மலம் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சென்னைக் கண்நோய்

'அடினோ வைரஸ்' கிருமிகளின் தாக்குதலால் இது வருகிறது. அடுத்தவர்களுக்கு மிக எளிதாகப் பரவக்கூடியது. கண் சிவந்து கண்ணீர்வடிதல், எரிச்சல், வலி, வீக்கம் இதன் அறிகுறிகள். இதற்குச் சொட்டு மருந்துகள் உள்ளன. மருத்துவர் யோசனைப்படி சொட்டு மருந்தைத் தேர்வு செய்வது நல்லது; சுய மருத்துவம் வேண்டாம்.

இந்த நோய் வராமல் தவிர்க்க, கண்நோய் வந்தவர் கண்ணைக் கசக்கக் கூடாது. கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். நோயுள்ளவர் பயன்படுத்திய கைக்குட்டை, துண்டு, சோப்பு, தலையணை, பற்பசை போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.

டைபாய்டு காய்ச்சல்

'சால்மோனெல்லா' எனும் பாக்டீரியாக்களால் இந்த நோய் வருகிறது. இக்கிருமிகளும் மாசடைந்த குடிநீர் மற்றும் உணவு மூலம்தான் மற்றவர்களுக்குப் பரவுகின்றன. முதலில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி கால்வலியுடன் நோய் தொடங்கும். ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும். பசி குறையும். குமட்டல், வாந்தி, வயிற்றுவலி தொல்லை தரும். உடல் சோர்வடையும். இக்காய்ச்சலைக் குணப்படுத்த நவீன மருந்துகள் பல உள்ளன. நோயின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றுக்கொண்டால் நோய் விரைவில் குணமாகும். இந்த நோய்க்கும் தடுப்பூசி உள்ளது. ஒருமுறை இதைப் போட்டுக்கொண்டால் மூன்று வருடங்களுக்கு டைபாய்டு காய்ச்சல் வராது.

எலிக் காய்ச்சல்

மழைக் காலத்தில் தெருக்களில் தண்ணீர் தேங்கும்போது, வீட்டில் வளரும் எலி, பெருச்சாளி போன்றவையும் அந்தத் தண்ணீர் வழியாகச் சென்றுவரும். அப்போது அவற்றின் சிறுநீர்க் கழிவும் அதில் கலக்கும். அந்தக் கழிவுகளில் 'லெப்டோஸ்பைரா' எனும் கிருமிகள் இருந்தால் ‘எலிக் காய்ச்சல்’ எனப்படும் ‘லெப்டோபைரோசிஸ்' நோய் வரும். கடுமையான காய்ச்சல், தாங்க முடியாத தசைவலி, உடல்வலி, மஞ்சள் காமாலை, கண்களில் ரத்தக்கசிவு, சிறுநீரிலும் மலத்திலும் ரத்தம் போவது போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள். தெருக்களில் நடக்கும்போது கணுக்கால் மூடும்படி கால்களில் செருப்பு அணிந்துகொள்வதும் வீட்டுக்கு வந்ததும் சுடுநீரில் கால்களைக் கழுவுவதும் இந்த நோயைத் தவிர்க்க உதவும். இதைவிட முக்கியம், குளத்துநீரில் குளிப்பதைத் தவிர்ப்பது.

தெருக்களில் மழைநீர் தேங்காமலிருக்க உள்ளாட்சி அமைப்புகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரில் குளோரினைக் கலந்து சுத்தமான தண்ணீருக்கு உத்தரவாதம் தர வேண்டும். தெருக்களில் பிளீச்சிங் பவுடரைப் போட வேண்டியதும் கொசுமருந்து அடிக்க வேண்டியதும் இன்றைய அவசரத் தேவைகள். அரசு எல்லா ஊர்களிலும் மருத்துவ முகாம்களை நடத்தி, தடுப்பு மருந்துகளைக் கொடுத்து, மழைக் கால நோய்களைக் கட்டுப்படுத்துவது பல உயிர்களைக் காப்பாற்றும்!

No comments:

Post a Comment