மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அலுவலர் பணியிடங்களுக்கு, நேரடி தேர்வு மூலம் நியமனம் மேற்கொள்ள, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பிற்கு தடை கோரிய வழக்கில், டி.என்.பி.எஸ்.சி., செயலருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸ் கணேசராணி தாக்கல் செய்த மனு: மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அலுவலர் பணியிடங்களுக்கு, நேரடி தேர்வு மூலம் நியமனம் மேற்கொள்ள, ஜூலை, 31ல், டி.என்.பி.எஸ்.சி., செயலர், அறிவிப்பு வெளியிட்டார். நர்சாக பணிபுரிவோரை இடமாறுதல் செய்தல் மற்றும் பதவி உயர்வு மூலம், அலுவலர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதற்கு முன் எங்களைப் போல் பணிபுரிவோருக்கு, பயிற்சி அளிக்க வேண்டும் என, சுகாதாரத் துறை செயலர் அறிவிப்பு வெளியிட்டார்;ஆனால் பயிற்சி அளிக்கவில்லை. இதை கருத்தில் கொள்ளாமல், அலுவலர் பணிக்கு நேரடி தேர்வு அறிவிப்பு வெளியிட்டது சட்டவிரோதம். பணி நியமனத்தில், எங்களைப் போன்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. டி.என்.பி.எஸ்.சி., செயலர் அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு, கணேசராணி உட்பட, ஏழு பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி டி.ஹரிபரந்தாமன், ''மனுதாரர்களுக்காக, ஏழு பணியிடங்களை காலியாக வைத்திருக்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., செயலர் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலருக்கு, 'நோட்டீஸ் அனுப்பப்படுகிறது,'' என்றார்.
No comments:
Post a Comment