சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதிப்புக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன.ஆனாலும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மொத்தம் 45 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்று திறக்கப்படவில்லை.19 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. இதில் 11 நாட்கள் பள்ளி வேலை நாட்களாகும். இயற்கையின் சீற்றத்தால் தவிர்க்க முடியாத காரணத்தால் பாதுகாப்பு கருதி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டன.இதனால் 10–ம் வகுப்பு, பிளஸ்–2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பு போன்றவை நடத்தப்பட உள்ளன.பள்ளிகளுக்கு விடப்பட்ட தொடர் விடுமுறையை ஈடு செய்ய கல்வித்துறை அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தினர். அரையாண்டு தேர்வை தள்ளி வைக்கலாமா? மாணவர்களின் விடுமுறை நாட்களை குறைத்து வேலை நாட்களை அதிகரித்து இதனை சரி செய்யலாமா? என பரிசீலனை செய்தனர்.ஆனால் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் தான் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் தான் அதிகளவு பள்ளி, மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதனால் ஒட்டு மொத்த பள்ளி மாணவர்களும் தேர்வை தாமதப்படுத்துவது சரியாக இருக்காது என்ற முடிவை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்தனர்.தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களுக்காக அரையாண்டு தேர்வை தள்ளி வைப்பது ஒட்டு மொத்த மாணவர்களின் நலனை பாதிக்கும் என்பதால் திட்டமிட்டப்படி அரையாண்டு தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வி முடிவு செய்துள்ளது.ஏற்கனவே அறிவித்துள்ள அரையாண்டு கால அட்டவணைப்படி தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதன்படி பிளஸ்–1, பிளஸ்–2 மாணவர்களுக்கு டிசம்பர் 7–ந்தேதியும், 10–ம் வகுப்பிற்கு டிசம்பர் 9–ந்தேதியும், அரையாண்டு தேர்வுகள் தொடங்கி நடத்தப்பட வேண்டும். இதே போல 9–ம் வகுப்புகளுக்கு 9–ந்தேதியும், 6 முதல் 8–ம் வகுப்புகளுக்கு 14–ந்தேதியும், இரண்டாம் பருவத்தேர்வுகளை நடத்த வேண்டும்.அனைத்து மாணவர்களுக்கும் டிசம்பர் 22–ந்தேதிகள் அரையாண்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறை விடப்படும். அரையாண்டு விடுமுறையிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை வழக்கம் போல விடுமுறை விடப்பட உள்ளது.ஆனால் தற்போது விடப்பட்டுள்ள விடுமுறை நாட்களை சனிக்கிழமை கூடுதல் வேலை நாட்களாக பணியாற்ற வேண்டும். அனைத்து சனிக்கிழமைகளும் எதிர்வரும் காலங்களில் ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்.குறிப்பாக பொதுத்தேர்வு எழுதும் 10–ம் வகுப்பு, பிளஸ்–2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் கூடுதலாக வகுப்பு நேரம் அதிகரிக்கப்பட்டு விடுப்பு நாட்களை ஈடு செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment