காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் பல்வேறு நகரங்கள் தண்ணீரில் மிதந்து வருகிறது. மேலும், ஏரிகள் உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருகினால் கிராமப் பகுதிகளைத் தண்ணீர் சூழ்ந்துள்ளன. இதனால், அரசுப் பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இங்கு வடிகால் வசதியில்லாதாதல், பல்வேறு இடங்களில் இன்னும் வடியாமல் தேங்கி நிற்கின்றன. மேலும், பள்ளி நிர்வாகத்தால் கைவிடப்பட்ட பழைய வகுப்பறை கட்டிடங்கள் கனமழையில் தாக்குபிடிக்காமல் விரிசல் ஏற்பட்டு சரிந்து விழும் நிலையில் உள்ளன. இதனருகே உள்ள கட்டிடங்களில் வகுப்பறைகள் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கிராமப் பகுதிகளில் தொடக்கப் பள்ளியின் வகுப்பறை கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. சில இடங்களில் கனமழை விட்ட பிறகும் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப, பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, பெற்றோர்கள் கூறியதாவது: கனமழை காரணமாக கான்கீரிட் கட்டிடங்களாக உள்ள பள்ளிகளின் வகுப்பறையில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது. கிராமப் பகுதியில் ஓடுகளைக் கூரை யாகக் கொண்ட கட்டிடங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள் ளது. மேலும், முறையான வடிகால் வசதி இல்லாததால் பள்ளி வளாகத் தில் நாள் கணக்கில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதே பகுதியில் இடியும் நிலையில் உள்ளதாக, பள்ளி நிர்வாகத்தால் கைவிடப்பட்ட பழைய வகுப்பறை கட்டிடங்கள் தண்ணீரில் மிதந்து நிற்கிறது. இந்தக் கட்டிடங்களின் அருகே வகுப்பறைகள் செயல்படுகிறது. இந்நிலையில், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினால் அசம்பாவிதங்கள் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால், பள்ளி வளாகத்தில் உள்ள பழையகட்டிடங்களை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், பள்ளி வளாகங்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் வடிவதற்கும், சகதிகள் ஏற்படாமல் மண் கொட்டுவதற்கும் மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா கூறியதாவது: கனமழையால் சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடங்கள் குறித்து, கணக்கெடுப்பு செய்து வருகிறோம். மேலும், தற்போது 16 பள்ளிகளில் தண்ணீர் வடியாமல் உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தப் பள்ளிகளில் தண்ணீர் வடிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கெனவே இடியும் நிலையில் உள்ள கட்டிடங்கள், கனமழையில் சேதமடைந்த கட்டிடங்கள் தொடர்பாக, கணக்கெடுப்பு செய்து வருகிறோம். இப்பணிகள் முடிந்ததும், மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக் கல்வித்துறையிடம் அறிக்கையை சமர்பித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், பெற்றோர் அச்சம்கொள்ள தேவையில்லை இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment