தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் தாமாக முன்வந்து அளிக்கும் நூல்கள் கொடை இயக்கம் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றார் துணைவேந்தர் க. பாஸ்கரன்.
பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
தமிழ்ப் பல்கலைக்கழக நூலகத்தில் இப்போது 1,70,327 நூல்கள் உள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தில் நூல்கள் வாங்குவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு ரூ. 5 லட்சம் வழங்குகிறது. நூல்கள் விலை ஏற்றத்தால் அத்தொகையில் அதிகளவில் நூல்கள் வாங்க முடியவில்லை.
எனவே, பொதுமக்கள் தாமாக முன் வந்து தமிழ்ப் பல்கலைக்கழக நூலகத்துக்கு நூல்களை அன்பளிப்பாக அளிக்கக்கூடிய நூல்கள் கொடை இயக்கம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான தொடக்க விழா விரைவில் நடைபெறவுள்ளது.
இந்த இயக்கத்தில் பொதுமக்கள் குறைந்தது ஒரு நூல், அதிகபட்சமாக எவ்வளவு நூல்கள் வேண்டுமானாலும் அன்பளிப்பாக அளிக்கலாம். நூல்களை அன்பளிப்பாக வழங்கியவரின் பெயரை ஒட்டுத்தாளில் அச்சிட்டு அவர்கள் அளித்த நூலிலேயே ஒட்டப்படும். நூறு நூல்களை வழங்கினால் பெயர் பலகையில் அன்பளிப்பாளரின் பெயர் எழுதப்படும்.
இந்த இயக்கத்தில் ஓராண்டுக்குள் ஒரு லட்சம் நூல்கள் சேகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பின்னர், வீதி வீதியாகச் சென்று நூல்கள் சேகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். ஆண்டுக்கு தலா 10 புதிய நூல்களும், மறுபதிப்பு நூல்களும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
25 சதக் கட்டணச் சலுகை:
இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு 25 சதக் கட்டணச் சலுகை வழங்கப்படும். இதற்கு பல்கலைக்கழக ஆட்சிக் குழுவில் அனுமதி பெறப்பட்டுள்ளது.
தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் இப்போது 86 சான்றிதழ், பட்டய, பட்டப்படிப்புகள் உள்ளன. இப்போது, வேலைவாய்ப்பை அடிப்படையாகக் கொண்டு உள் அலங்காரம் (இன்டீரியர் டெக்கரேஷன்), ஆபரண வடிவம் (ஜூவல்லரி டிசைன்), வடிவமைப்பு, நாகரிகப் பாங்கு (பேஷன் டிசைன்), ஊசி சிகிச்சை (அக்குபங்சர்), மணக்கணக்கு அறிவாற்றல் (அப்பாகஸ்), நிகழ்ச்சி தொகுப்பு மற்றும் நிகழ்ச்சி மேலாண்மை (காம்பிரியரிங் - ஈவன்ட் மேனேஜ்மென்ட்) ஆகிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை சான்றிதழ், பட்டயம், பட்டப்படிப்பு ஆகிய 3 பிரிவுகளிலும் தமிழ், ஆங்கில வழிகளில் நடத்தப்படும். இதற்கான மாணவர் சேர்க்கை ஜனவரி மாதத்தில் தொடங்கப்படும்.
மீண்டும் சமுதாய வானொலி:
இரு ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்த சமுதாய வானொலி தீபாவளி (நவ.10) முதல் மீண்டும் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் அலைவரிசை 91.2. சிற்பக் கலை, கட்டடக் கலைத் துறையில் சிற்பப் பயிற்சிக் கூடமும் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
மலேசியாவில் தமிழ்ப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை சார்பில் நவ. 15-ம் தேதி சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இதில், மலேசிய எழுத்தாளர் பெ. ராஜேந்திரன், சிங்கப்பூர் எழுத்தாளர் ஷாநவாசுக்கு கரிகாற்சோழன் விருது வழங்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு முதல் இலங்கை தமிழ் எழுத்தாளருக்கும் விருது வழங்கப்படும் என்றார் பாஸ்கரன். அப்போது, பதிவாளர் சே. கணேஷ்ராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment