Pages

Tuesday, November 17, 2015

அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வருகிறது டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழு தயாரிப்பு


அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வருகிறது. இந்த புதிய கொள்கையை டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழு தயாரித்து வருகிறது.


10 லட்சம் ஆலோசனைகள்

மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி ஸ்மிருதி இராணி புதிய கல்வி கொள்கையை உருவாக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். கடைசியாக 1992-ம் ஆண்டில் கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு இன்றளவிலும், அந்த கல்வி கொள்கைதான் அமலில் உள்ளது.

இப்போது, புதிய கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற மத்திய அரசாங்க கேபினட் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் ஓய்வு பெற்ற 3 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் ஒரு கல்வியாளர் அடங்கிய குழு, நகல் கல்வி கொள்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த கல்வி கொள்கையை உருவாக்க ஏறத்தாழ 10 லட்சம் ஆலோசனைகளை இந்த குழு பரிசீலித்து வருகிறது.

அமைச்சர்களுடன் ஆலோசனை

இந்த குழு தனது நகல் கல்வி கொள்கைக்கான பணியை டிசம்பர் 31-ந் தேதி முடிக்கிறது. அதன் பிறகு, மத்திய அரசு பரிசீலனை செய்து பிப்ரவரி மாதம் இந்த கல்வி கொள்கையை ஸ்மிருதி இராணி பிரதமரிடம் தாக்கல் செய்கிறார்.

2016-ம் கல்வியாண்டில், இந்த புதிய கொள்கை நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு எத்தகைய கல்விமுறை பயனுள்ளதாக இருக்கும். வேலை வாய்ப்பிற்கு எது எது உகந்ததாக இருக்கும் என்பது போன்ற ஏராளமான கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

பல்கலைக்கழக மானிய குழு, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், மத்திய செகண்டரி போர்டு போன்ற பல அமைப்புகள் கருத்துகளை வழங்கி உள்ளன. மேலும், இந்த கல்வி கொள்கை தொடர்பாக ஸ்மிருதி இராணி, மாநில கல்வி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment