Pages

Friday, November 6, 2015

மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு இயற்கை பாடம்! வனத்தை பாதுகாக்க புது முயற்சி


தண்ணீர் சிக்கனம், வனம் மற்றும் வனஉயிரினங்கள் பாதுகாப்பு குறித்து, மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆசிரியர்கள் வாயிலாக மாணவர்களுக்கு கற்பிக்கவும், 'இயற்கை பாடம்' நடத்தப்படவுள்ளது.


நாட்டின் வனப்பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. வன உயிரினங்களுக்கான உணவு, தண்ணீர் தேவை வனத்தினுள் குறைந்து வரும் நிலையில், அவை வனத்தை விட்டு வெளியே வருகின்றன. இதனால், மனித - வன விலங்கு மோதல் ஏற்படுகிறது. வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில், சமீப காலமாக, யானை, சிறுத்தை, கரடி, காட்டு எருமை போன்ற விலங்குகள் புகுந்து விடுவது அதிகரித்து வருகிறது. இதனால், மனித - விலங்கு மோதலும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

வன உயிரினங்களை பாதுகாத்தால் தான், மனிதர்களுக்கான காற்று, குடிநீர், உணவு போன்றவை தடையின்றி கிடைக்கும். இதுபற்றிய புரிதல் இல்லாததால், பல இடங்களில் போராட்டங்களும், பிரச்னைகளும் வெடிக்கின்றன. இயற்கையை பாதுகாக்க வேண்டும், வனவிலங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற உணர்வை மாணவர்கள் மனதில் விதைக்க வேண்டும்.

இதற்காக, 'நேச்சர் கன்சர்வேஷன் சொசைட்டி' அமைப்பு வாயிலாக, தனியார் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு, விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில், கோவை மாநகரம், புறநகரம் மற்றும் நீலகிரி மாவட்ட போலீசாருக்கு, வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. அதேபோன்று, மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம், 'நேச்சர் கன்சர்வேஷன் சொசைட்டி', வனத்துறை இணைத்து, செயல்வடிவம் கொடுத்துள்ளது.

மாநகராட்சியிலுள்ள, 41 துவக்கப்பள்ளிகளில் பணியாற்றும், 199 ஆசிரியர்கள்; 15 நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும், 109 ஆசிரியர்கள்; 11 உயர்நிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள், 103 பேர்; 16 மேல்நிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள், 408 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம், 83 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை, தலா, 274 பேர் வீதம், மூன்று பிரிவுகளாக பிரித்து பயிற்சி வகுப்பு நடக்கிறது. சித்தாபுதுார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், வரும் 24, 25, 26 ஆகிய தேதிகளில், 'பயிற்றுனர்களுக்கான பயிற்சி' என்ற தலைப்பில், 'இயற்கை பாடம்' போதிக்கப்படுகிறது.

காலை, 10:00 - மாலை 4:00 மணி வரையிலும் வகுப்பு நடக்கிறது. மொத்தம் மூன்று நாட்கள் பயிற்சியில், மூன்று பிரிவுகளாக பயிற்சி வகுப்பு நடக்கிறது. தண்ணீர் பாதுகாப்பு, வனஉயிரின பாதுகாப்பு, மனித - விலங்கு மோதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமயமாதல் ஆகிய தலைப்புகளில், 'பவர் பாயின்ட்' மற்றும் செயல்திட்டம் முறையில் வகுப்பு நடக்கிறது. வனத்துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் அமைப்பினர், வனத்துறை கால்நடை மருத்துவர்கள், துறை சார்ந்த வல்லுனர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

தொடர்ந்து, வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர். சுழற்றுச்சூழலை பாதுகாக்க இலவசமாக இப்பயிற்சி நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment