Pages

Saturday, November 14, 2015

ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள்: தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை பெய்யும்


தமிழகம் சென்னை: வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள இரு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் காரணமாக சென்னை முதல் கன்னியாகுமரிவரையிலான கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் உருவான, காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த திங்கட்கிழமை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அப்போது தமிழகம் முழுவதும் பெரும் மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் உண்டானது. அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்ததால் வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், பெங்களூரிலும் பலத்த மழை பெய்தது.
தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து கேரளா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் மேலடுக்கு சுழற்சியாக நிலை கொண்டிருந்தது. அது தற்போது வங்கக்கடலுக்கு இடம் பெயர்ந்து மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இருக்கிறது. அதேபோல, வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுநிலையும் உருவாகி இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நிருபர்களிடம் கூறியதாவது: கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் புதன்கிழமை நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதியாக உள்ளது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் (வெள்ளிக்கிழமை), தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வடமாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். இதற்கிடையே, தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை, மேற்கு நோக்கி நகர்ந்து சனிக்கிழமை, தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சனிக்கிழமை முதல் 16ம் தேதி, திங்கள்கிழமை வரை தமிழகம் முழுவதும் மழையை எதிர்பார்க்கலாம். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்யக்கூடும். பிற மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment