காஞ்சிபுரம் : சில தினங்களாக பெய்த கன மழையால், காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கல் ஏரி வேகமாக நிரம்பியுள்ளது; அங்கு, 5,500 பறவைகள் குவிந்துள்ளன. எனவே, வேடந்தாங்கல் சரணாலயம் இன்று முதல், பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு, இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் மற்றும், பல மாநிலங்களில் இருந்து, அக்டோபர் மாதத்தில், ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து குவியும். அவை, இங்கேயே தங்கி, கூடுகட்டி, இனப்பெருக்கம் செய்யும். ஏப்ரல் முதல் மே வரை பறவைகள் இங்கு தங்கியிருக்கும். அதன்படி, 2014 அக்டோபர், 27ல் திறக்கப்பட்ட சரணாலயம், 2015 மே, 31ல் மூடப்பட்டது. 2013 - 14ல், ஒரு லட்சம் பெரியவர்கள், 38 ஆயிரம் சிறுவர்கள்; 2014 - 15ல், 70 ஆயிரம் பெரியவர்கள், 22 ஆயிரம் சிறியவர்கள் சரணாலயத்தை பார்வையிட்டுள்ளனர்.
இந்த ஆண்டில், ஏரி வறண்டு இருந்ததால், பறவைகள் வரவில்லை. அதனால், அக்டோபரில், சரணாலயத்தை திறக்க முடியவில்லை. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில், சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பருவ மழையை எதிர்பார்த்து, வேடந்தாங்கல் ஏரியின் வரத்து கால்வாய்களை வனத்துறையினர் ஏற்கனவே சீரமைத்து இருந்ததால், ஏரி வேகமாக நிரம்பியது.
அதனால், ஏரியில் தற்போது, நத்தைகுத்தி நாரை, 2,020; வக்கா, 1,104; சாம்பல் நிற கொக்கு, 200 என, 5,500 பறவைகள் குவிந்துள்ளன. இதையடுத்து, கூடுதல் முதன்மை தலைமை பாதுகாவலர் ரெட்டி, வனச்சரகர் டேவிட்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று ஆய்வு செய்தனர். அதன்பின், வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிலி சரணாலயங்களை பொதுமக்கள் பார்வையிட, இன்று முதல் திறக்க முடிவு எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment