Pages

Saturday, November 7, 2015

உலக மக்கள் தொகையில் ஒன்பது பேரில் ஒருவருக்கு தூய்மையான குடிநீர் கிடைப்பதில்லை: தேசிய கருத்தரங்கில் தகவல்


உலகில் உள்ள மக்களில் ஒன்பது பேரில் ஒருவருக்கு சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை என்று தேசிய கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.


திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறை சார்பில் இந்தியாவில் நீர் சுத்தம், சுகாதாரம், சிக்கல்களும், சவால்களும் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.

உலகப் பொருளாதார நெருக்கடிகளில் முக்கிய ஆபத்துகளில் முதலிடத்தில் தண்ணீர் உள்ளது. தண்ணீர் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் பிரச்சினையால் மாநிலங்களுக்கு இடையே உள்ள முரண்பாடுகள், பருவ நிலை மாற்றத்தில் தோல்வி, வேலைவாய்ப்பின்மை, சுற்றுச்சூழல் பாதிப்பு, அரசுக்கு நெருக்கடி உட்பட பல பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

உலக மக்கள் தொகையான 783 மில்லியனில் ஒன்பது பேரில் ஒருவருக்கு சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. ஐந்து வயதுக்கு கீழ் உள்ளவர்களில் இறப்பவர்களில் ஐந்து பேருக்கு ஒருவர் தண்ணீர் சம்பந்தப்பட்ட நோயால் இறக்கிறார். உலகில் உள்ள மருத்துவமனைகளில் பாதிக்கும் மேற்பட்ட படுக்கைகளில் தண்ணீர் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

இதில் பொருளாதாரத் துறை பேராசிரியர் நேரு வரவேற்றார். பேராசிரியர்கள் செல்வராஜன், சுகிர்தாரணி, சுப்புராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

துணைவேந்தர் சு.நடராஜன் பேசியதாவது:

கிணறு, குளம், ஆறுகள் ஆகியவற்றை சரியாகப் பராம ரிக்காததால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது. அணை களை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். வேளாண்மைக்கான நீர் ஆதாரம் குடிநீர் ஆதாரமாக மட்டுமே பயன்படுகிறது. மக்கள் பெருக்கத்துக்கேற்ப நீர் ஆதாரத்தை பெருக்கவேண்டும். நீரின் தரத்தை உறுதி செய்வதன் மூலம் நீரினால் ஏற்படும் நோய்களை தவிர்க்கலாம் என்றார். இக்கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பேராசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

இந்தியாவிற்கு 137-வது இடம்

உலக நாடுகளில் பிரான்ஸ், இஸ்ரேல், ஜெர்மனி, கத்தார் ஆகிய நாடுகள் 100 சதவீதம் சுத்தமான குடிநீரை மக்களுக்கு வழங்கி வருகின்றன. சுகாதாரத்திலும் முன்னிலை வகிக்கின்றன.

மக்களுக்கு சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் வழங்குவது, சுகாதாரத்தில் இந்தியா உலக அளவில் 137-வது இடத்தை பிடித்துள்ளது. இதில் தென்னாப்பிரிக்கா 107-வது இடத்திலும், சீனா 109-வது இடத்திலும் உள்ளது.

இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களில் 82 சதவீதம் பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை எனக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment